×

மக்களவை தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியீடு திமுக அணி அபார வெற்றி பெறும்: மத்தியில் பா.ஜனதா அணி 280-300 இடங்களை பிடிக்கும்

புதுடெல்லி: நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ேநற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. இதில், தமிழகத்தில் திமுக கூட்டணி 29 இடத்திற்கு மேல் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 280-300 இடங்களை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.
இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி 29 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ல் 38 தொகுதிகளையும் வென்ற அதிமுக இம்முறை, ஒற்றை இலக்க தொகுதியிலேயே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜ கூட்டணி 58 இடங்களையும், சமாஜ்வாடி - பகுஜன்சமாஜ் கூட்டணி 20 இடங்களையும் வெல்லும் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 16-20 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும், அங்கு பாஜ முதல் முறையாக கணக்கை தொடங்கி வரலாறு படைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் பாஜ 18-20 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜ வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீகாரில் பாஜ கூட்டணிக்கு 30 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத்தில் பாஜ அமோக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 இடங்களில் வெல்லும் என்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 7 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:

* டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் பாஜ கூட்டணிக்கு 306 இடங்களும், காங்கிரசுக்கு 132 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 104 தொகுதிகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* இண்டியா நியூஸ் கருத்து கணிப்பில் பாஜ கூட்டணிக்கு 287, காங்கிரஸ் கூட்டணிக்கு 128, மற்றவைக்கு 104 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

* ரிபப்ளிக் கருத்து கணிப்பில் பாஜ கூட்டணி 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களும், மற்றவை 127 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

* நியூஸ் நேசன் கணிப்பில் பாஜ கூட்டணி 282-290 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 118-126 இடங்களும் மற்றவை 130-138 இடங்களும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

* என்டிடிவி கணிப்பில் பாஜ கூட்டணி 300, காங்கிரஸ் கூட்டணி 127, மற்றவை 115 இடங்களை கைப்பற்றும்.

* நியூஸ் எக்ஸ் கணிப்பில் பாஜ கூட்டணி 242, காங்கிரஸ் கூட்டணி 164, மற்றவை 136 இடங்களும் கைப்பற்றும்.

* நியூஸ் 18 கணிப்பில் பாஜ கூட்டணி 336, காங்கிரஸ் கூட்டணி 82, மற்றைவ 124 இடங்களை கைப்பற்றும்.

* ஏபிபி-நீல்சன் கணிப்பில் பாஜ கூட்டணி 267, காங்கிரஸ் கூட்டணி 127, மற்றவை 148 இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

* ஜன் கி பாத் கணிப்பில் பாஜ கூட்டணி 305, காங்கிரஸ் கூட்டணி 124, மற்றவை 87 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜ கட்சி 543 தொகுதிகளில் 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களைக் கைப்பற்றியது.

காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும், ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் என்றாலும், பாஜ அதற்கு கடும் போட்டி ஏற்படுாத்தும் என்று கூறப்படுகிறது.

நம்ப வேண்டாம் மம்தா எச்சரிக்கை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவ ருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘‘கருத்துக் கணிப்புகள் என்பது கிசுகிசுக்களை போன்றது. இதுபோன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கருத்துக்கணிப்புகள் மூலம் பல்லாயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதுதான் அவர்களின் திட்டம். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இணைந்திருந்து வலிமையாக நிற்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Lok Sabha ,win ,DMK ,team , Lok Sabha polls, opinion polls, DMK,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...