×

சோளிங்கரில் இன்று காலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கருடசேவை உற்சவம்

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கருடசேவை உற்சவம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும்  பிரம்மோற்சவத்தின்போது கருடசேவை உற்சவம் சிறப்பு வாய்ந்தது. அப்போது வேலூர் மாவட்டம், சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிலும் கருடசேவை நடைபெறுவது வழக்கம். சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி  கோயிலை அனுமானித்த தொட்டாச்சாரியார் என்பவர் காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கருடசேவைக்கு சென்று பெருமாளை தரிசித்து வந்தார். ஆனால் ஒருமுறை உடல் நலக்குறைவு காரணமாக காஞ்சிபுரம் செல்ல முடியாமல் தவித்த  அவர், சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமர்ந்து சுவாமியை தரிசிக்க முடியாமல் மனமுருகி வேண்டினார்.

இதையறிந்த காஞ்சி வரதராஜர் கருட சேவையில் இருந்து ஒரு நிமிடம் மறைந்து சோளிங்கர் தக்கான் குளக்கரையில் இருந்த தொட்டாச்சாரியாருக்கு காட்சி கொடுத்ததாகவும், அதனை மெய்ப்பிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும்  நடக்கும் வைகாசி மாத கருடசேவையின்போது சுவாமி கோபுர வாசல் வந்ததும் சுவாமியை குடைகளால் மறைக்கப்படும், அப்போது வரதராஜபெருமாள் சோளிங்கரில் உள்ள தொட்டாச்சாரியாருக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம். இந்நிலையில்  காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ கருடசேவை இன்று நடப்பதையொட்டி சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிலும் வைகாசி மாத கருடசேவை உற்சவம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை  திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர்  தங்க கருட வாகனத்தில் உற்சவர் பக்தோசித பெருமாள் அலங்கரிக்கப்பட்ட 4 மாட வீதிகளில் வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.



Tags : Sholingham ,Lakshmi Narasimha Swamy Temple , Sholingar, Lakshmi Narasimha Swamy Temple, Garuda Sevai
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில்...