×

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்தல் ரூ.5க்கு ரேஷன் அரிசியை வாங்கி ரூ.70க்கு விற்பனை

வேலூர்: தமிழகத்தில் ரூ.5க்கு வாங்கும் ரேஷன் அரிசியை பாலீஷ் போட்டு மீண்டும் ரூ70 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே மக்கள் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு 3 விதமாக ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. அட்டைகளுக்கு ஏற்ப மாதந்தோறும் அரிசி,  பருப்பு, பாமாயில் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் 3 லட்சம் மெட்ரிக் டன் வரை ரேஷன் அரிசி இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் அரிசியை தமிழகத்தில் ஆந்திரா,  கர்நாடகா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவது தொடர்கதையாக உள்ளது. இங்கு கிலோ ₹5க்கு வாங்கி கடத்திச் செல்லப்படும் அரிசி, வெளிமாநிலங்களில் பாலீஷ் போடப்பட்டு மீண்டும்  தமிழகத்திற்கே எடுத்து வந்து கிலோ ₹50 முதல் ₹70 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அதற்கேற்ப 2017ம் ஆண்டில் அரக்கோணம் இந்திய உணவுக்கழக கிடங்கிலிருந்து பள்ளிப்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 275 குவிண்டால் அரிசி தனியார் அரிசி ஆலையில் பதுக்கியிருந்தது அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டது.  விசாரணையில், பாலீஷ் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதுதவிர ரேஷன் கடை பணியாளர்களும் அரிசி கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. எனவே,  தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன் அரிசி  கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2.20 லட்சம் கிலோவுக்கும் அதிகமான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர  அதிகாரிகள் ஆய்வில் தப்பிய சிலர் ரேஷன் அரிசியை கடத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.

 குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ், ரயில்களில் ரகசிய உளவாளிகளை நியமித்து கண்காணித்து வருகிறோம். இதனால், ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு தமிழகத்தில் ஸ்மார்ட்  ரேஷன் கார்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் அரிசியை கடத்தி விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், இலவச ரேஷன் அரிசி பயன்படுத்துவதை தவிர்க்கும்  பொதுமக்களில் பெரும்பாலானோர் கிலோ ₹5க்கு அரிசியை விற்பனை செய்துவிடுகின்றனர். இந்த அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று பாலீஷ் போட்டு விற்பனை செய்வதாக தெரிகிறது. மேலும் தமிழகத்துக்கே கடத்தி வந்து  விற்பனை செய்வதாகவும் புகார்கள் நிலவி வருகிறது.

இதில் ஒடிசா போன்ற மாநிலங்களில் பாலீஷ் போடாமலே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற ரேஷன் அரிசி கடத்தலால் தமிழக அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் ரேஷன் அரிசி விற்பனை  செய்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதுதொடர்பாக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வழங்கல் அதிகாரிகளிடம்  ஆலோசனை செய்யப்பட உள்ளது. ரேஷன் அரிசியை விற்பனை செய்து கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு இலவச அரிசியை நிறுத்துவதற்கும் வழங்கல் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.

Tags : The ration rice for Rs
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...