×

கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடக்கம்: குமரியில் தென் மேற்கு பருவமழை கை கொடுக்குமா?...கால்வாய்களை தூர்வார நிதி இல்லாமல் பொதுப்பணித்துறை திணறல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கால்வாய்கள், குளங்கள் வறண்டு கிடக்கும் நிலையில், கன்னிப்பூ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.  குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிகள்  நடந்து வருகிறது. இதனை தவிர தென்னை, வாழை, ரப்பர் பயிர்கள் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. சாகுபடிக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை நம்பியே விவசாயிக்ள உள்ளனர். கும்பப்பூ சாகுபடிக்கு பின்னர் மார்ச் மாதம் பேச்சிப்பாறை அணை அடைக்கப்பட்டு, அதில் உள்ள தண்ணீர் அடுத்த கன்னிப்பூ சாகுபடிக்கு இருப்பு வைக்கப்படும்.  இந்நிலையில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அணையை உறுதிப்படுத்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் அணையில் உள்ள தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 1.65 அடி ( இன்று காலை 8 மணி நிலவரப்படி) தான் தண்ணீர் உள்ளது. இதனால் கோடைகாலம் முடிந்த பிறகு கன்னிப்பூ சாகுபடி தொடங்கும் வேளையில் பேச்சிப்பாறை அணை தண்ணீர் விவசாயத்திற்கு கிடைக்குமா என்பதில் இந்த ஆண்டும் சந்தேகம் எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் சராசரியாக இருபோக நெல் சாகுபடியின்போது கும்பபூவிற்கு 6,500 ஹெக்டர் பரப்பிலும், கன்னிப்பூ 6,500 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கும்பபூ அறுவடை மார்ச் மாதம் முதல் வாரத்தில் முடித்தாக வேண்டும். அப்போதுதான் சரியான அளவு மகசூல் கிடைக்கும். ஆனால் குமரி மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் காலம் கடந்து பயிர்கள் அறுவடை நடப்பதால் போதிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தில் சிக்கி வருகின்றனர். கடந்த கன்னிப்பூ, கும்பப்பூ நெல்சாகுபடியின் போது போதிய விளைச்சல் கிடைக்காமல் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்தனர். வருகிற ஜூன் மாதம் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்வார்கள். கன்னிப்பூ சாகுபடிக்கு அம்பை 16, திருப்பதிசாரம் 5 ஆகிய நெல் ரகத்தை பயன்படுத்தி வருகின்றனர். நெல் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்க ஜூன் 1ம் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அணை திறக்கப்பட்ட பிறகு பருவமழை பெய்தால் 105 நாட்களில் கன்னிப்பூ அறுவடையாகும். ஆனால் தற்போது பேச்சிப்பாறை அணை உறுதிபடுத்தும் வேலை இன்னும் முடிவடையாததால், கன்னிப்பூவிற்கு தேவையான தண்ணீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து கிடைக்குமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் கோடையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாசன கால்வாய்கள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. பல இடங்களில் மீன் பிடிப்பதற்காக குளங்களில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் இந்த  ஆண்டு தென் மேற்கு பருவமழை திட்டமிட்டப்படி தொடங்குமா? என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான சாகுபடி பணிகள் தென் மேற்கு பருவமழை நம்பியே உள்ளன.  குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அதிக மழை பொழிவு இந்த கால கட்டத்தில் தான் இருக்கும். ஆனால் ஓகி புயல் மற்றும் பானி புயல் உருவான நிலையில், தட்ப வெப்ப நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலையில் பெய்ய வேண்டிய மழை கடந்த இரு ஆண்டுகளாகவே ஏமாற்றி வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் குமரி மாவட்டத்தில் வெகுவாக குறைந்து விட்டது. பல இடங்களில் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணறுகள் கூட தண்ணீரின்றி வறண்ட நிலைக்கு சென்றுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை பொறுத்தவரை விவசாய பணிகளுக்கு மட்டுமின்றி, குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த அணைகளில் நீர் இருப்பு தான் குமரி மாவட்டத்தின் தாகத்தையும் தீர்க்க வேண்டும்.

பேச்சிப்பாறையில் தண்ணீர் தேக்க முடியாத நிலையில் பெருஞ்சாணி அணையில் அதிகளவு தண்ணீர் தேக்க  அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெருஞ்சாணி அணை மொத்தம் 77 அடி கொள்ளளவு ஆகும். இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம் 23.30 அடியாக உள்ளது. சிற்றார் 1 , 5.28 அடியாகவும், சிற்றார் 2, 5.38 அடியாகவும் உள்ளன. பொய்கை 9.20 , மாம்பழத்துறையாறு 42.32 அடியாக உள்ளது. மழை அளவை பொறுத்தவரை சிற்றார் 1 பகுதியில் மட்டும் 1 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. கடும் கோடையின் காரணமாக கால்வாய்கள்,  குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதை பயன்படுத்தி முறையாக தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி உள்ளனர்.  ஆனால் பொதுப்பணித்துறையில் போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் தூர்வாரும் பணிகளும் முறையாக நடக்க வில்லை. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ேதர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளன. எனவே ஜூன் மாதத்தில் தான் நிதி ஒதுக்கீடு பற்றியே அரசு சிந்திக்கும். அதன் பிறகு தூர்வாரும் பணிகளை நடத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

வருண பகவானின் கருணை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி தொடங்கி உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டது. பெரியார் அணை உறுதிதன்மையை உறுதிப்படுத்திய பணியைபோன்று பேச்சிப்பாறையில் பணி நடக்கிறது. அணையின் முன்பு அமையும் சார் அணை பணிகள் முடிந்து விட்டன. அணையின் மற்ற மராமத்து பணிகள் நடக்கின்றன. கன்னிப்பூவை காப்பாற்றும் வகையில் பெருஞ்சாணி, சிற்றார்1, சிற்றார்2 ஆகிய அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப்படும். பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் கடலில் கலக்காத வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் நிரப்பி விவசாயத்தை காப்பாற்ற பயன்படுத்தப்படும். தூர்வாரும் பணிகளை பொறுத்தவரை பொதுப்பணித்துறையில் உள்ள ஓரளவு நிதியை கொண்டு அந்த பணியை செய்து வருகிறோம் என்றார்.


Tags : Kumari , Virgin cultivation work, Kumari, south west monsoon, canals, public service department
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!