×

பீகார், பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ஏழைகளின் பசியை தீர்க்கும் ரொட்டி வங்கி: குஜராத் மாநிலத்திலும் அறிமுகம்

ராஜ்கோட்: ‘பசியுடன் யாரும் உறங்கக்கூடாது’ என்ற கருணையின் அடிப்படையில் ராஜ்கோட்டில் செயல்பட்டு வரும் ரொட்டி வங்கி உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்குகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரொட்டி வங்கி ஒன்றை தனியார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இவர்கள், ராஜ்கோட் பகுதியைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், சாலையோரத்தில்  தங்கியிருக்கும் வயதானவர்கள், குழந்தைகளுக்கு ரொட்டி உணவு வழங்கி வருகின்றனர். குறிப்பாக உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்கும் திட்டமாக, இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற ரொட்டி வங்கிகள் ஏற்கனவே  பீகார் மற்றும் பஞ்சாபில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது இந்த ரொட்டி வங்கி குஜராத்திலும் தொடங்கியதாக அதன் அறங்காவலரான உபாத்யாயா கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில், ‘‘ஒரு ஆட்டோ வாகனம் வைத்துக் கொண்டு வீடுவீடாக சென்று ரொட்டி போன்ற உணவுப் பொருட்களை சேகரித்து வருவோம். தினமும் 300 சப்பாத்திகளை திரட்ட முடியும். வீடுகளில் ரொட்டி செய்யும்  பெண்கள், ஏழைகளின் வற்றுப்பசி தீர தங்களால் இயன்ற ரொட்டிகளை அளிப்பர். சில பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து, தாங்களாகவே முன்வந்து எங்களது ‘ரொட்டி வங்கி’ அலுவலகத்துக்கு வந்து ரொட்டியை வழங்கிவிட்டு செல்வர்.  இதன்மூலம் நூற்றுக்கணக்கான ஏழை குழந்தைகள், தொழிலாளர்கள், வயதானவர்களின் பசி போக்கப்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bihar ,Punjab ,introduction ,Gujarat , Bihar, Punjab, poor hunger, bread bank, Gujarat
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!