அடிப்படை வசதியுமின்றி துர்நாற்றம் வீசும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம்

தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் பட்டுக்கோட்டை. ஒரு ஊரின் அழகே பேருந்து நிலையம் தான். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு தினம்தோறும் 20,000 முதல் 30,000 பயணிகள் வரை வந்து செல்கின்றனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடமாக பேருந்து நிலையம் மாறிவிட்டது. பேருந்து நிலையத்தில் உள்ள சாக்கடை வாய்க்காலும், பேருந்து நிலையத்தின் தரைதளமும் ஒரே மட்டத்தில் உள்ளது. இதனால் தெருவோரங்களில் உள்ள சாக்கடை கழிவுநீர், பேருந்து நிலைய பகுதியில் கலந்து விடுவதாலும் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. அரை மணி நேரம் மழை பெய்தாலே பேருந்து நிலையத்துக்குள் மழைநீர் தேங்கி அதோடு சாக்கடை கழிவுநீரும் கலந்து நடைபாதைகளில் வழிந்தோடுகிறது. அரை மணி நேர மழைக்கே பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். கழிவுநீர் தேங்கி நிற்பதால் டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயத்தில் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சிறுநீர் கழிக்கும் இடமாக சாக்கடை கால்வாய் ஓரத்தை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்துக்குள் வரும் பயணிகள் துர்நாற்றத்தால் மூக்கை பொத்தி கொண்டே வர வேண்டிய ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை நகராட்சி அதிகாரிகளோ, அரசுத்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

பேருந்து வளாக இருப்பிடத்தை சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மிக முக்கியமாக பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்து எந்த நேரத்திலும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிர்பலி வாங்கவும் காத்திருக்கிறது. இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக பேருந்து நிலைய மேல்தளம் செயல்பட்டு வருகிறது. எனவே பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை தினம்தோறும் அகற்றி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீரை முழுவதுமாக அகற்ற பம்ப் மூலம் உறிஞ்சி தேவையான இடங்களை சுத்தப்படுத்த வேண்டும். போதுமான அளவுக்கு இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கட்ட வேண்டும். பொதுமக்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வேண்டும். வடிகால் வாய்க்காலில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்து மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பொன்னவராயன்கோட்டை வீரசேனன் கூறுகையில், எந்தவிதமான ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதியுடன் கூடிய ஓய்வறை இல்லை. பேருந்து நிலைய வெளிபுறத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கென்று தனித்தனியே கட்டணமில்லா கழிப்பறை மற்றும் குளியலறை இல்லை. பேருந்துகள் புறப்படும் நேரம், சென்று சேரும் இடம், வழித்தடம் குறித்து விளம்பர பலகைகள் வைக்கப்படவில்லை. குறைந்த கட்டணத்துடன் கூடிய பொருள் பாதுகாப்பு அறை இல்லை. இரவு நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஹெல்ப்லைன் காவலர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போதுள்ள பேருந்து நிலையத்தையும், அருகில் உள்ள பழைய பேருந்து நிலையத்தையும் ஒன்றாக்கி நகர பேருந்துகளுக்கு ஒரு பகுதியாகவும், புறநகர் பேருந்துகளுக்கு ஒரு பகுதியாகவும் தனித்தனியே அமைக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த தாய்மார்கள் பாலூட்டும் அறை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பித்ததோடு சரி, தொடர்ந்து செயல்படவில்லை. பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டருக்கு புகார் தெரிவித்ததால் அவர் சில மாதங்களுக்கு முன்பு நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய எந்த ஒரு குறைபாடும் இன்று வரை நிவர்த்தி செய்யவில்லை. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் உள்ள வடிகால் வாய்க்கால் தரைமட்ட அளவில் தான் இருக்கும். பேருந்து நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருக்கின்றன. இது 3 மாதங்களுக்கு ஒருறை அகற்றப்படுகிறதே தவிர நிரந்தரமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதில்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலரான பட்டுக்கோட்டை ஆதிமதனகோபால் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் முக்கியமான நகராட்சி பட்டுக்கோட்டை. ஆனால் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. இப்போது இருக்கிற மக்கள் தொகை அடிப்படையிலும், பேருந்துகள் அடிப்படையிலும் பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லை. புறநகர் பகுதியில் ஒரு மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு கலெக்டரும் ஆய்வு செய்து 2 ஆண்டுகளாகி விட்டது. அந்த முயற்சி என்னவானது என்று இன்று வரை தெரியவில்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

3 மாதங்களுக்கு ஒருமுறை பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்தாலும் அங்கு எடுக்கக்கூடிய கழிவுகளை அதே இடத்தில் அப்படியே போட்டு விட்டு செல்லக்கூடிய அவலநிலையும் இருக்கிறது. பேருந்து நிலையத்தின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரையில் காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பட்டுக்கோட்டை பேருந்து நிலைய கட்டிடங்களின் உறுதி தன்மையை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்களை முழுமையாக அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு நகர பேருந்து நிலையமாக அமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையத்தில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டது. இப்போது அந்த இருக்கைகள் உடைந்த நிலையில் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. மேலும் பேருந்து நிலையத்தில் குப்பை தொட்டி கிடையாது. இந்த பேருந்து நிலையத்தை நகர பேருந்து நிலையமாக பயன்படுத்தி கொண்டு புறநகர் பகுதியில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அதேநேரத்தில் தனியார் ஆம்னி பஸ்கள், பேருந்து நிலையத்தை சுற்றி ஆங்காங்கே நிறுத்தி இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு ஆட்களை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆம்னி பேருந்துகளுக்கென்று தனி இடம் ஒதுக்க வேண்டும். பேருந்து நிலைய சீர்கேடு குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், நகராட்சி அதிகாரிகளிடமும் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லை. அதேநேரத்தில் ஒரு சுகாதார வசதியும் கிடையாது. எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும். தற்போது அதற்கான குடிநீர் தொட்டி உள்ளது, ஆனால் தினசரி தண்ணீர் நிரப்புவது இல்லை. கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைக்க வேண்டும் என்றார்.

Related Stories: