×

தீவிரவாதத்துக்கு எதிராக போராட இலங்கைக்கு முழு ஆதரவு: இந்திய தூதர் அறிவிப்பு

கொழும்பு: ‘தீவிரவாதத்துக்கு எதிராக போராட, இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும்,’ என்று இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து அறிவித்துள்ளார். இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பெண் உள்பட 9 தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக மாறி நடத்திய இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் தாக்குதல் திட்டத்தை இலங்கையில் செயல்பட்ட, ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பு நிறைவேற்றியது.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, நேற்று முன்தினம் இலங்கை பாதுகாப்பு நிலவரம் குறித்து கண்டியில் உள்ள தலாடா மலிகாவா புத்த மடாலயத்தில் உள்ள புத்த மதத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து புத்த மதத் தலைவர்களுடன் இந்நாட்டுக்கான இந்திய தூதர் தரன்ஜித் ஆலோசனை நடத்தினார். அப்போது, இலங்கைக்கு விடப்பட்டுள்ள தீவிரவாத மிரட்டலை எதிர்கொள்ள இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார். இதை புத்த மதத் தலைவர்கள் வரவேற்றனர்’ என கூறப்பட்டுள்ளது. 


Tags : Sri Lanka ,Ambassador ,Indian , Terrorism, fight against, Sri Lanka, full support, Indian ambassador
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்