×

பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடி மவுனம் பற்றி தலைவர்கள் கிண்டல்

புதுடெல்லி:  டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜ தலைவர் அமித் ஷாவும் நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் மோடி கலந்து கொண்ட முதல் செய்தியாளர்கள் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. இதை எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியாக கிண்டல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் டிவிட்டர் பதிவில், ‘கேள்வி கேட்க விரும்பிய நிருபர்களுக்கு கதவுகள் அடைக்கப்பட்டதாக தகவல். நீங்கள் தலைகாட்டியதே, பாதி போராட்டத்துக்கு வந்தது மாதிரி. அடுத்த முறை சில கேள்விகளுக்கு பதில் அளிக்க, அமித்ஷா உங்களை அனுமதிப்பார்’ என்று கூறியுள்ளார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டர் பதிவில், கண், காது, வாய் மூடி அமர்ந்திருக்கும் 3 குரங்குகளின் படத்தை வெளியிட்டு தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‘பிரதமரின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்த்தீர்களா? இதுதான் மன் கி பாத் கடைசி நிகழ்ச்சி’ என குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘பத்திரிக்கையாளர் வேடத்தில் அமர்ந்திருந்த பா.ஜ தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க அமித் ஷா மறக்கவில்லை,’ என கூறி ‘நானும் காவலாளி’ என்ற பிரசாரத்தில் பத்திரிக்கையாளர்களும் இணைந்து விட்டனர் என அமித்ஷா கூறிய செய்தியையும் இணைத்திருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில், ‘‘பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கு, அவர்தான் பதில் அளிக்க வேண்டும். அவர்கள் ஏதையோ மறைப்பதுபோல் தெரிகிறது,’’ என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘தேர்தல் முடிவு தவறாக இருந்தால் பழியை ஏற்க வேண்டிய நபர் அமித்ஷா என்ற தகவலை தெரிவிப்பதற்காகவே பிரதமர் மோடி, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் என நினைக்கிறேன்,’’ என்றார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறுகையில், ‘‘இது மோடியின் ‘மவுன் கி பாத்’ (மவுன பேச்சு)’’ என்றார். மோடியின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்களால் கடும் விமர்சனத்துக்கும், கேலிக்கும் உள்ளாகி இருக்கிறது. மீம்ஸ்களால் மோடியை வாட்டி வருகின்றனர்.

Tags : Modi ,press meet , Journalist's meeting, Modi's silence, leaders, teasing
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...