×

திருமண மண்டப முன்பதிவிற்கு மணமக்கள் வயது சான்று கட்டாயம்: கேரள குழந்தைகள் நல ஆணையம் அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் திருமண மண்டபம் முன்பதிவு செய்ய மணமக்களின் வயது சான்றிழை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக மாநில குழந்தைகள் நல ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கேரளாவில் சில பகுதிகளில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக மாநில குழந்தைகள் நல ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் போலீசின் நடவடிக்கையையும் மீறி சில பகுதிகளில் குழந்தை திருமணம் நடைபெற்றது. இதையடுத்து குழந்தை திருமணத்தை தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருமணத்திற்காக மண்டபத்தை முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு மணமக்களின் வயது சான்றிதழை கட்டாயமாக்க கேரள குழந்தைகள் நல ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பது: திருமணத்திற்காக மண்டபத்தை முன்பதிவு செய்ய வருபவர்களிடமிருந்து மண்டப நிர்வாகத்தினர் மணமக்களின் வயது சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும். வயது சான்றிதழ் இல்லாதவர்களுக்கு மண்டபத்தை வாடகைக்கு விடக்கூடாது. சான்றிதழில் வயது குறைவாக இருந்தால் மண்டபத்தை அனுமதிக்க கூடாது. வயது குறைவானவர்களின் திருமணத்திற்காக அணுகினால் மண்டப நிர்வாகிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வயது சான்றிதழின் நகலை மண்டப நிர்வாகம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : bride ,Kerala Child Welfare Commission Action , Marriage hall, reservation, bride, age, testimony, and Kerala child welfare commission action...
× RELATED மணப்பெண் மாயம்