ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்: எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்தவர் கைது

மரக்காணம்: மரக்காணம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் 100 கிராமங்கள் உள்ளது. இங்கு 2 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் முற்றிலும் அழிந்துவிடும் நிலை உள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும்போது வெளியாகும் கழிவுகளால் பொதுமக்கள், கால்நடைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் காவிரி டெல்டாவை பாதுகாக்கக்கோரி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 67 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. வரும் ஜூன் 1ம் தேதி திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 29ம்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக ராயநல்லூரில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் 4-வது நாளாக பருத்திச்செடி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

100 போலீசார் குவிப்பு:  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள உமையாள்புரத்தில் விவசாய வயலை நாசப்படுத்தி கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நிலம் நீர் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் மற்றும் பலர் கடந்த 16ம் தேதி குழாய் பதிக்க கூடாது என்று வலியுறுத்தினர். இதனால் கெயில் நிறுவனம் கனரக வாகனத்தை வயலிலிருந்து வெளியேற்றியது. இதுகுறித்து தங்கள் பணிகளை தடுப்பதாக செம்பனார்கோவில் போலீசில் கெயில் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று அதேபகுதியில் கெயில் நிறுவனத்தினர் குழாய் பதிக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக விவசாயிகள் அழைத்ததன்பேரில் இரணியன் சென்றார். அப்போது அங்கிருந்த மயிலாடுதுறை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குழாய் பதிக்கும் இடங்களில் சுமார் 100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜரிடம் முறையீடு:

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை சிதம்பரம் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம மக்களை திரட்டி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அங்கு நடராஜர் முன்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுவை வைத்து திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

Related Stories:

>