×

திண்டுக்கல் உட்பட 3 பதிவு மாவட்டங்கள் தரம் உயர்வு

சென்னை:பத்திரப்பதிவுத்துறையில் 9 மண்டலங்கள், 50 பதிவு மாவட்டங்கள், 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பத்திரப்பதிவு பணிகளையும் டிஐஜிக்கள் கண்காணிப்பார்கள். அவர்களுக்கு உதவியாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் உதவிப்பதிவுத்துறை தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிகப்பதிவு மற்றும் பணிச்சுமை உள்ள 13 பதிவு மாவட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அதில் 13 உதவிப்பதிவுத்துறை தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சங்கங்களின் பதிவாளராகவும், துணை சீட்டு பதிவாளராகவும், திருமண பதிவாளராகவும், கூட்டு பங்கான்மை நிறுவனங்களில் பதிவாளராகவும் செயல்படுகின்றனர். முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்குகின்ற பணியினையும் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் பதிவுப்பணி அதிகரித்ததன் காரணமாக தற்போது திண்டுக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 3 பதிவு மாவட்டங்களையும் தரம் உயர்த்த பதிவுத்துறை முடிவு செய்தது. அதன்பேரில் தற்போது 3 பதிவு மாவட்டங்களில் உதவிப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் நிர்வாக பணிகளை ஒப்படைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து அந்த அலுவலகங்களில் உதவி பதிவுத்துறை தலைவர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Dindigul 3 , Dindigul, registration, counties, quality, promotion
× RELATED திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி