×

திருவள்ளூர் அருகே பல நூற்றாண்டுகள் பழமையான கூடியம் குகை குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் அவலம்: சுற்றுலா தலமாக மாறுவது எப்போது?

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பல நூற்றாண்டுகள் பழமையான குகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கூடியம் கிராமத்தில் இருந்து, 4.கி.மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு குகைகள் நூறாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால் நம்ப முடிகிறதா?. நுழைய முடியாத அளவு அங்கு இன்னும் 16 குகைகள் உள்ளனவாம்.
இந்த இரண்டு குகைகளுக்கும் செல்ல ஒற்றையடிப் பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். செல்லும் வழியெல்லாம் பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் உள்ளன. அங்கு மாணிச்சம்மன் கோவில் என்ற ஒரு சிறிய கோவில் உள்ளது. அதனால் கூடியம் கிராம மக்கள் அவ்வப்போது போய் வருகிறார்கள். இதை முதன்முதலில் பிரிட்டிஷ்காரர் ராபர்ட் ப்ரூஸ் பூட் என்பவர் 1863ல் கண்டறிந்தாராம். இவர் சேகரித்த தொல்லியல் தடய பொருட்கள் அனைத்தையும் 1904ல் சென்னை அருங்காட்சி வசம் ஒப்படைத்துள்ளார். இவை அனைத்தும் பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் நடபெற்று வந்தாலும், 1965க்குப் பிறகு இப்படி ஒரு குகை இருந்தது என்பதையே தமிழக அரசு மறந்துவிட்டது. நன்றாக புதர்மண்டிய பிறகு இதை புலிக்குன்றம் ‘பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி’ என வேறு ஆக்கிவிட்டார்கள்.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழும் மண் இது என்பதை அடித்துச் சொல்கிறது கூடியம் குகை. மூன்று திருமண மஹால்கள் அளவிற்கு பெரிய குகை மையமாகவும், அதை சுற்றிலும் ‘ப’ வடிவத்தில் இருந்த மலை குன்றுகளில் 15 குகைகளும் இருக்கின்றன. தொல்மாந்தர்கள் பெரும் மக்கள் சமூகமாக வாழ்ந்ததற்கான அடையாளமாக இந்த குகைகளும், காடும், சமவெளி, ஆற்று படுகையும் இருக்கின்றன. பெரும் குகையின் உயரமானதொரு மூலையில் பல மலைத்தேனிக் கூடுகள் உள்ளன. குகையின் மறுபக்கம் சிறு மரங்களாலும், புதர்களாலும் குகைகயின் மேலிருந்து தொங்கிய பசும் கொடிகளாலும் இயற்கை சொர்க்கபுரி போல உள்ளது.இந்திய தொல்பொருள் துறை இந்த குகைகள் பாதுகாக்க எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. ஒரு அறிவிப்பு பலகை கூட வைக்கப்படவில்லை. இதன் விளைவாக கிராம மக்கள் சிலர் அம்மன் சிலையை, சூலாயுதத்தை, சில கடவுள் படங்களை இங்கு வைத்து வழிபட தொடங்கி உள்ளனர். அடுத்ததாக புதிய கட்டுமானங்களை கட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும். இல்லையேல், இரண்டு லட்சம் ஆண்டுகள் வரலாற்றை மறைப்பதில் அல்லது குழப்புவதில் இவை கொண்டு சென்று சேர்த்துவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதில் பெரும் கொடுமை என்னவென்றால், மத்திய, மாநில தொல்லியல் துறைகள் இரண்டுமே இதை பராமரிப்பதில்லை. கூடியம் குகைக்கு அருகே, கழிவு பொருட்களை சிலர் அங்கு வீசி விட்டுச் செல்கின்றனர். குகைகளில் தங்கள் பெயர்களை எழுதி விட்டுச் செல்கின்றனர். அங்குள்ள ஒவ்வொரு பொருளும், பெரும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது. ஆனால், அவற்றை நாம் மதிப்பதே இல்லை. உள்ளூர் மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வும் இல்லை. இனிமேலாவது, மத்திய, மாநில தொல்லியல் துறைகள், கூடியம் குகை மீது அக்கறை செலுத்த வேண்டும். இல்லை என்றால் நம்மிடம் உள்ள மிகப்பெரிய பொக்கிஷம் அழிவின் விளிம்புக்குச் செல்லும்.

கலெக்டர் பேச்சு காற்றோடு போச்சு

2014ல் இங்கே மக்களைக் கூட்டிச்சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அப்போதைய கலெக்டர் வீரராகவராவ், மக்கள் வந்து பார்த்து செல்ல இப்பகுதி சுற்றுலாத் தலமாக ஆக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
ஆனால் இன்று வரையில் கூடியம் குகையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த சுற்றுலாத் துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மறுபடியும் புதர்மண்டிப் போகுமோ? என்ற அவலநிலை உள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முறைப்படி கூடியம் குகை இடத்தை வனத் துறையினரிடம் இருந்து சுற்றுலாத் துறையினர் வசம் பெற வேண்டும். பின்னர் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அனுமதி கிடைத்த பின்னர் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை’ என்றனர்.

Tags : cave ,Thiruvallur ,civilians ,tourist destination , Tiruvallur, Pondicherry Cave, Travel
× RELATED கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம்