×

ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலைக்கோயில் பகுதியில் சப்தஸ்வரங்களுடன் ஒலி எழுப்பும் இசைப்பாறை: சுற்றுலாத்தலமாக மாற்ற பக்தர்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே அமைந்துள்ள காஞ்சனகிரி மலைக்கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலையில் 60 ஏக்கர் பரப்பளவில் 1008 சுயம்பு லிங்கங்கள், காஞ்சனகிரீஸ்வரர் கோயில், விநாயகர் சன்னதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. விரைவில் இங்கு ₹10 கோடியில் 4 ராஜ கோபுரங்களுடன் கூடிய புதிய சிவன் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. இச்சிறப்பு வாய்ந்த காஞ்சனகிரி மலையின் மீது பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பகுதியும், தட்டினால் சப்தஸ்வரங்களுடன் ஒலி எழுப்பும் இசைப்பாறை, பல்வேறு மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த புல்வெளி, சாம்பிராணி குகை ஆகியன அமைந்துள்ளன.

மேலும், காஞ்சனகிரி மலை மீது நின்று பார்த்தால் சுற்று வட்டார கிராம பகுதிகள், பலவித சத்தங்களை எழுப்பும் பறவைகள், மழை காலங்களில் காணப்படும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், கார்த்திகை தீபம் ஏற்றும் கல்தூண்கள், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கூண்டுகள் உள்ளன. மேலும், இங்கு சுவையான தண்ணீர் நிறைந்த வற்றாத சுனையும் உள்ளது. இங்குள்ள லாலாபேட்டை படகு படித்துறைகள், பசுமை  போர்த்திய புல்வெளிகள், மயில்கள், மான்கள் என வாழும் மலையில் தினம்  மற்றும் விடுமுறை நாட்களிலும் காஞ்சனகிரி மலையை காணவரும் பக்தர்களின்  கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு இத்தலத்தில் பவுர்ணமி கிரிவலத்துடன், ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் பல்வேறு கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.


முன்பு காஞ்சனகிரி மலைக்கு செல்ல சாலை வசதியில்லாத நிலையில் தற்போது 6 கி.மீ தூரம் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்காஞ்சனகிரி மலையை சுற்றுலாத்தலமாக அறிவிப்பதுடன், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று பக்தர்கள், சுற்று வட்டார கிராம மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். அதற்கேற்ப சட்டமன்ற மனுக்கள் குழுவும் இக்கோரிக்கையை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு காஞ்சனகிரியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்துவது போல், சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்திலிருந்து மாநில சுற்றுலாத்துறை உயரதிகாரிகள் மற்றும் வாலாஜா ஒன்றிய அதிகாரிகள் ஜீப் மூலம் காஞ்சனகிரி மலையை ஆய்வு செய்தனர். ஆனால் அதோடு காஞ்சனகிரியை சுற்றுலாதலமாக்குவதற்கான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதேநேரத்தில் தற்போது மிகக்குறைந்த அரசு நிதியாக சாலை உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக ₹70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, காஞ்சனகிரி மலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சுற்றுலா தலமாக்கவேண்டும். அதோடு இம்மலையில் மான்கள் சரணாலயமும் அமைக்க வேண்டும் என சுற்று வட்டார கிராம மக்களுடன் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,Sapthaswara ,Ranipettai ,Kanchanagiri hill , Queenpump, musical, tourism
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...