×

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் விநியோகிக்க அமைச்சர்கள் தலைமையில் பணப்பட்டுவாடா கூட்டம் : வேடசந்தூரில் பரபரப்பு

வேடசந்தூர்: அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வேடசந்தூரில் அமைச்சர்கள் தலைமையில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஆர்.வெள்ளோடு கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், இன்று இடைத்தேர்தல்  நடக்கும் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் ஆலோசனைக்கான கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஊராட்சிகளுக்கான 13 பூத்  கமிட்டிகளை சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், அமைச்சர் அன்பழகன், வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட துவக்கத்தில் 13 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத் நிர்வாகிகளுக்கும், விடுபட்ட வாக்காளர்களுக்கு வழங்கவும் பணப்பட்டுவாடா செய்ததாக தெரிகிறது.

இன்று இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அரவக்குறிச்சி பகுதியில் கூட்டம் நடத்தி பணப்பட்டுவாடா செய்ய முடியாது என்பதால், அதிமுகவினர் அரவக்குறிச்சிக்கு அருகில் உள்ள ஆர்.வெள்ளோடு  பகுதி தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளனர்.
பட்டுவாடா குறித்த தகவல் அறிந்ததும், திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் கூட்டணி கட்சியினர்,  திண்டுக்கல், கரூர் மாவட்ட தேர்தல்  அதிகாரிகள், போலீஸ் எஸ்பி உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர். தேர்தல் பறக்கும் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால்  அமைச்சர்கள், எம்எல்ஏவிற்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்தும் முடிந்து கூட்டம் கலைந்த பிறகே பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டு, சில மணி நேரத்திற்கு பிறகே மண்டபத்திற்கு வந்தததால், திறந்திருந்த மண்டபத்தை மட்டும் இவர்கள் பார்வையிட்டு திரும்பினர்.

பரமத்தி வேலூரில் ரகசிய ஆலோசனை

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் அதிமுக பூத் ஏஜென்டுகள், தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான ரகசிய ஆலோசனைக் கூட்டம் நேற்று தொகுதிக்குட்பட்ட நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக காலை 9 மணி முதல் அதிமுக நிர்வாகிகள், எம்பி சுந்தரம் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் மண்டபத்திற்கு வந்தனர். கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பரமத்திவேலூர் திமுக., எம்எல்ஏ கே. எஸ். மூர்த்தி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீசாருக்கு புகார் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர், அந்த திருமண மண்டபத்தின் முன்பு மறியலில் ஈடுபட முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதன்பின் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மண்டபத்தில் இருந்த அதிமுகவினரை வெளியேற்றினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கூட்டம் நடத்தக் கூடாது என கூறி அனுமதி மறுத்தனர். இதனால்., எம்பி சுந்தரம் தலைமையில் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Aavakurichi ,Ministers ,meeting , Aavakurichi, Ministers, distribute ,by-election meeting
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...