×

மக்களவை தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட நாடு  முழுவதும் 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 59 மக்களவை  தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன், மக்களவை தேர்தல் முடிவுக்கு வருகிறது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக  அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இதில் சராசரியாக 66.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று 7வது  மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 8 தொகுதிகள், இமாச்சல  பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13,  உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, சண்டிகரில் ஒரு தொகுதி என மொத்தம் 59  தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுதவிர கோவாவில் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்ததால் காலியாக உள்ள பனாஜி சட்டப்பேரவை தொகுதி, தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் வடக்கு  கொல்கத்தா, தெற்கு கொல்கத்தா, டம்டம், பராசாட், பசீர்ஹாட், ஜதாவ்பூர்,  வைரத்துறைமுகம், ஜெய்நகர் (தனி), மதுராபூர் (தனி) ஆகியவற்றில் இன்று  நடக்கும் தேர்தலில் மொத்தம் 111 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை  1.49 கோடி வாக்காளர்கள்
ஓட்டுப் போட்டு தேர்வு செய்கின்றனர். இதில்,  ஜதாவ்பூர் தவிர மற்ற 8 தொகுதிகளிலும் 4 முனை போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித் ஷா,  காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் போட்டிப் போட்டு பிரசாரம்  செய்து வந்தனர். இந்நிலையில், கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்கிழமை பாஜ தலைவர் அமித்ஷா  பங்கேற்ற தேர்தல் பிரசாரத்தில் திரிணாமுல் - பாஜ தொண்டர்கள் இடையே மோதல்  ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில், சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர  வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால், இம்மாநிலத்தில் கடந்த 17ம் தேதி முடிய  வேண்டிய இறுதிக்கட்ட பிரசாரத்தை, ஒருநாள் முன்னதாக 16ம் தேதி இரவு 10  மணியுடன் தேர்தல் ஆணையம் அதிரடியாக நிறுத்தியது.   

வன்முறை  நடைபெற்றதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் முதல்முறையாக வாக்குப்பதிவை  கண்காணிக்க சிறப்பு போலீஸ் பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தில்  இன்று 13 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், பிரதமர்  மோடி போட்டியிடும் வாரணாசி, மகாராஜ்நகர், கோரக்பூர், குஷிநகர், டியோரியா,  பன்ஸ்கான் (தனி), கோஷி, சலேம்பூர், பாலியா, காஜிபூர், சந்தாலி, மிர்ஷாபூர்,  ரோபர்ட்கஞ்ஜ் (தனி) ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றில் 167 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர். வாரணாசி தொகுதியில் அதிகபட்சமாக 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். இம்மாநிலத்தில் இன்றைய தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக  மோடி மட்டுமின்றி, மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா, மாநில பாஜ தலைவர்  மகேந்திரநாத் பாண்டே உள்ளிட்டோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

பஞ்சாப்பில் 13 மக்களவை தொகுதிகளில் 24 பெண்கள் உள்பட 278 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது தவிர யூனியன் பிரதேசமான சண்டிகரில் 6 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுபோட்டு எம்பியை தேர்வு செய்ய உள்ளனர். இங்குள்ள ஒரு தொகுதியில் தற்போதைய எம்பி.யும் பாஜ வேட்பாளருமான கிரண் கெரை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான பவன்குமார் பன்சால் போட்டியிடுகிறார். பீகாரில் 157 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு போட்டியிடுபவர்களில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ராம் கிரிபால் யாதவ், ஆர்.கே.சிங், அஸ்வின் குமார் சவ்பே ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் உள்பட 42 பேரும், இமாச்சல பிரதேசத்தில் 45 ேவட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் கந்திலால் பூரியா, அருண் யாதவ் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி  வரை நடைபெறுகிறது. இத்துடன், மக்களவைக்கு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி கடந்த 38 நாட்களாக நடைபெற்று வந்த 7 கட்ட தேர்தலும் முடிவுக்கு வருகிறது. இவற்றில் பதிவான வாக்குகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்  அறிவிக்கப்பட உள்ளது.

918 வேட்பாளர்கள்

* இன்றைய தேர்தலில் 10.01 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
* 1.12 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
* மோடி உட்பட 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
* 7 கட்டத்திலும் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகிறது.
* மே.வங்கத்தில் தேர்தலை கண்காணிக்க சிறப்பு போலீஸ் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழகத்தில் 4 பேரவை தொகுதிகளிலும், கோவாவில் பனாஜி பேரவை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்கிறது.

Tags : round ,elections ,Lok Sabha , final round, Lok Sabha elections today
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...