×

ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில் வணிகவரித்துறையில் இந்தாண்டு வருவாய் இலக்கு நிர்ணயமில்லை

சென்னை: வணிகவரித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு வருவாய் இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று வணிகவரித்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரி அமலால் மாநில வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த நிலையில், ஆல்கஹால், பெட்ரோல் வரி விதிப்பின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி இழப்பை சரி செய்யலாம் என்று மாநில அரசு எண்ணியது. அதன்படியே, கடந்த 2017-18ல் ரூ.73,148 கோடி வருவாய் இலக்கை எட்டியது. இதில், எஸ்ஜிஎஸ்டி (மாநில சரக்குகள் சேவை வரி மூலம்) ரூ.16,199 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ.7402 கோடி மட்டுமே வரி வருவாய் கிடைத்தது. மது மூலம் மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி எட்டியது.

இந்த நிலையில், 2018-19யை காட்டிலும் வணிக வரித்துறை வருவாய் இலக்கு கடந்த 2017-18யை காட்டிலும் கூடுதலாக வருவாய் எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், மாநில சரக்குகள் சேவை வரி மூலம் ரூ.24,509 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 2017-18 நிதியாண்டை போன்று மது, எரிபொருட்கள் மூலம் மட்டும் 2018-19ல் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை அடைந்தது. இதனால், இந்தாண்டும் கடந்த நிதியாண்டை போன்று கூடுதலாக வருவாய் இலக்கை எட்டியதாக வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்தாண்டு வருவாயை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாக வைத்து மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வணிகவரித்துறை இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று வணிகவரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும், வணிகவரித்துறையில் மது, எரிபொருட்கள் மூலமே அதிகளவில் வரிவருவாய் கிடைக்கிறது. இதன்காரணமாக, வருவாய் இலக்கை எட்ட முடிகிறது. எரிபொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வந்தால் மாநில அரசு வரிவருவாய் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, தான் மாநில அரசு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு மானியம் தர சம்மதித்தால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசு ஒத்துழைக்கும். ஆனால், மத்திய அரசு மானியம் தர சம்மதிக்காது. அதனால் தான் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது’ என்றார்.

Tags : This year's revenue target , business commodity
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...