×

பூஜை தட்டு, சடாரி, கலசங்கள் பயனற்றது என்ற பெயரில் கோயில் பொருட்களை ஏலம் விடுவதில் கோடிக்கணக்கில் மோசடி

சென்னை: பூஜை தட்டு, சடாரி, கலசங்கள் என்று பயன்பாடற்ற பொருள் என்ற பெயரில் பழமை வாய்ந்த கோயில் பொருட்களை டெண்டர் விடுவதில் பலகோடி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கோயில் பொருட்களை பூம்புகாரிடம் விற்பனை செய்ய அறநிலையத்துறை கமிஷனர் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக பயன்பாடற்ற நிலையில் இருக்கும் பூஜை தட்டு, கலசங்கள், தீர்த்தம் வழங்கும் கலசம் உள்ளிட்ட பித்தளை, செம்பால் ஆன பொருட்கள் டெண்டர் விட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில், பயன்பாடற்ற பொருட்கள் எனக்கூறி கலை நயம் மிக்க பழங்கால பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பழைய பயன்பாடற்ற பொருட்களை குறைந்த மதிப்பில் கோயில் நிர்வாகம் டெண்டர் விடுவதால் அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து பயன்பாடற்ற பித்தளை, செம்பு பொருட்களை பூம்புகார் நிறுவனத்திடம் விற்பனை செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் இருப்பில் உள்ள பித்தளை மற்றும் செம்பு ஆகிய இனங்கள் (கலைநயம் உடைய மதிப்புமிக்க பழங்கால பொருட்கள் தவிர) திருக்கோயிலுக்கு பயனற்றவையாக இருப்பின் ஆணையரின் முன் அனுமதி பெற்று டெண்டர்/ஏலம் மூலமாக விற்பனை செய்வதற்கு பதில் தமிழ்நாடு அரசு நிறுவனமான ‘தமிழ்நாடு கைத்தறித்தொழில் வளர்ச்சி கழகம் (பூம்புகார்)  நிறுவனத்திற்கு பித்தளை இனங்களை கிலோ 1க்கு ரூ.285 வீதமும் செம்பு இனங்களை கிலோ 1க்கு ரூ.325 வீதமும் கணக்கிட்டு நேரடியாக விற்பனை செய்து கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பூம்புகார் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தற்போது உள்ள சந்தை மதிப்பின் படி பித்தளை இனங்களை 1 கிலோ ரூ.285 வீதமும், செம்பு இனங்களை 1 கிலோ ரூ.385 வீதம் கணக்கிட்டு துறை விதிகளுக்கு உட்பட்டு நேரடியாக விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
மண்டல இணை ஆணையர்கள்/உதவி ஆணையர்கள்  ஆகியோர் இந்த விவரத்தினை கோயில் செயல் அலுவலர்/நிர்வாகிகளுக்கு தெரிவித்து அதன்படி செயல்பட அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : bidding , Fraud ,bidding , temple items
× RELATED அரசு ரப்பர் கழகத்தில் ஊடு பயிருக்கு...