×

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை, பூங்காக்களை நோக்கி படையெடுத்த மக்கள் : குடும்பம், குடும்பமாக இரவு வரை பொழுதை கழித்தனர்

சென்னை: வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை, பூங்காக்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர். அங்கு அவர்கள் இரவு வரை பொழுதை கழித்தனர். தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இது மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் வெயிலின் கோரத்தாண்டவம் என்று அழைக்கப்படும் “அக்னி நட்சத்திரம்” என்னும் “கத்ரி” வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து வெயில் பல மாவட்டங்களில் சதம் அடித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அனல் காற்று வேறு வீசுவதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் கோரத்தாண்டவத்தால் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர், இ.சி.ஆர், கோயம்பேடு 100 அடி சாலை, ஜி.எஸ்.டி. ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.

மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த நிலை தான் உள்ளது. அது மட்டுமல்லாமல் பஸ்கள், மின்சார ரயில்களில் சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியாத  அளவுக்கு அனல் காற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ் மற்றும் ரயில்களில் பகல் நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. காலை 11 மணிக்கு பிறகு வீடுகளில் உள்ள மின்விசிறிகள் ஓடினாலும் அதிலும் அனல் காற்றே வருகிறது.  இதனால், இல்லத்தரசிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வெளியிலும் அனல் காற்று பலமாக வீசுவதால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர். வெயியிலின் தாக்கத்தை தவிர்க்கவும், மரங்களின் காற்று, கடற்காற்றை அனுபவிப்பதற்காக சென்னைவாசிகள் மாலை 4 மணிக்கு பிறகு நாடி செல்லும் இடமாக பூங்காக்கள், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை முக்கிய இடம் வகித்து வருகின்றனர். நேரம் ஆக, ஆக கடற்கரை, பூங்காக்களின் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

குடும்பம் குடும்பாக வந்து பொழுதை கழித்து வருகின்றனர். இவர்கள் இரவு 9 மணிக்கு பிறகே வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் கடற்கரை, பூ்ங்காக்களில் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்பட்டு வருகிறது. இதே போல வெயிலின் தாக்கத்துக்கு இதமாக தற்காலிக குளிர்பான கடைகள், இளநீர் கடை, தர்ப்பூசணி, முலாம்பழம் கடைகள் முளைத்துள்ளன. அந்த கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 


Tags : shore ,parks , People who invaded,shore and the parks,escape from ,impact of the sun
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு