×

நெல்லையில் பழங்கால பொருட்கள் கண்காட்சி... 80 ஆண்டுக்கு முந்தைய காமிரா, சிறுவர் சைக்கிள், ஆட்டு உரல்

நெல்லை: நெல்லை அறிவியல் மையத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் 80 ஆண்டுக்கு முந்தைய காமிரா, ஆங்கிலேயர் காலத்து சிறுவர் சைக்கிள், பழங்கால ஆட்டு உரல் போன்றவற்றை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் 2 நாள் நடைபெறும் பழங்கால பொருட்களின் கண்காட்சி இன்று தொடங்கியது. மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எம்.குமார் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் மாரிலெனின் வரவேற்றார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ள தாகும். அபூர்வ பழங்கால பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பழங்காலத்தில் இருந்து இன்றுவரை பல்வேறு துறைகளில் நாம் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை இன்றைய மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி பயனளிக்கும். நமது விஞ்ஞான வளர்ச்சியை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக உள்ளது. இதுபோல் நெல்லை பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல்துறை மற்றும் தமிழ்த்துறை தொன்மை பொருட்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற பழங்கால பொருட்களின் தேடுதல்களை சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 80 ஆண்டுக்கு முந்தைய காமிரா, தியேட்டரில் பயன்படுத்தப்படும் புரொஜக்டர், அரிக்கேன் லைட், ரிக்கார்டு பிளேயர், வானொலி பெட்டிகள், 5 தலைமுறைக்கு முன்னர் பயன்படுத்தி வந்த வீட்டு உபயோகப்பொருட்கள், அஞ்சறை பெட்டிகள், தொலைக்காட்சி பெட்டி, நவீன தபால் தலை சேகரிப்பு, ஆட்டு உரல், குத்துஉரல், குழந்தைகள் விளையாடும் ஆங்கிலேயர் காலத்து சைக்கிள், தட்டச்சு எந்திரம், தஞ்சை ராஜராஜசோழன் கோயிலின் ஆயிரமாவது ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபாய் நாணயம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. கண்காட்சியை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

Tags : bale ,children , Exhibition, Nellai
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...