×

விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் விளை நிலத்தில் குழாய் பதிப்பு தீவிரம் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விளை நிலத்தில் குழாய் பதிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் நரிமணத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. பல்வேறு பகுதிகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு குழாய்கள் வழியாக கொண்டு வரப்படுகிறது. மேமாத்தூர் கிராமத்தில் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்கள் இணைப்பு மையம் உள்ளது. மாதானம் கிராமத்தில் இருந்து இந்த மையத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் குழாய்கள் பதிக்கும் பணி சில நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முடிகண்டநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் பாலன், மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணி செய்து சில நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரங்களை வயலில் இறக்கியது. இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் நிலநீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் விவசாயிகள் குறுவை நடவுசெய்த வயல்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் சேற்றை பூசிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு அதிகளவில் கிளம்பி வருவதால், சாகுபடி செய்யப்படாத நிலங்களில் குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் இறங்கி உள்ளது. நேற்று உமையாள்புரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணி நடந்ததால், அப்பகுதி விவசாய தொழிலாளர்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் விவசாயிகள் குழாய் பதிக்கப்பட உள்ள வயலுக்கு முன்பாக நின்று கெயில் நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் முடிகண்டநல்லூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக நிலம் நீர்பாதுகாப்பு இயக்க தலைவர் இரணியன், பொறுப்பாளர் விஷ்ணுகுமார், பாலன் மற்றும் விவசாயிகள் மோகன்தாஸ், செல்வராஜ், சிவானந்தம், ராமசாமி, தென்னரசு ஆகிய 8 பேர் மீது செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் முடிகண்டநல்லூர் விவசாயி சிவானந்தன்(45) நேற்று இரவு மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் அளித்த மனுவில், எனக்கு முடிகண்டநல்லூர் காகாத்தி பகுதியில் ஒரு ஏக்கர் விளைநிலம் உள்ளது. 15 நாட்களுக்கு முன்பு கோடை உழவு செய்து நாற்று நடவு செய்திருந்தேன். இந்நிலையில் கடந்த 16ம் தேதி மதியம் காரைக்கால் காமராஜர் சாலையில் இயங்கிவரும் கெயில் இந்தியா நிறுவன ஆணையின் பேரில் என் வயல் உட்பட மூன்று பேரின் விளைநிலங்களில் கனரக எந்திரங்களைக்கொண்டு குழாய் அமைப்பதற்காக பள்ளங்களை தோண்டிர். என்னுடைய அனுமதி இன்றி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நாற்று நடவுகளை பாழ்படுத்தி நிலத்தை வீணடித்து உள்ளனர். பட்டியல் சாதியினர் நிலத்தில் அத்துமீறி நுழைதல், பயிர்களை சேதப்படுத்தி அழித்தல் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நானும், என்குடும்பத்தினரும் கடுமையான துன்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம். எனவே எனது நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : farm , Pipe on the ground, Struggle
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...