×

புன்னக்காயல் மாலுமி துபாயில் இறந்தது எப்படி? உருக்கமான தகவல்கள்

ஆறுமுகநேரி: புன்னக்காயல் மாலுமி துபாயில் இறந்தது எப்படி? என்பது குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் நடுத்தெருவைச்சேர்ந்தவர் அந்தோணிசாமி(58). இவரது மனைவி ஜெலோட்டா. இவர்களுக்கு 3 மகன், 2 மகள். அந்தோணிசாமி கடல் தொழில் செய்து வருகிறார். இவர்களது மூத்த மகன் தந்தையுடன் கடல் தொழில் பார்க்கிறார். 2வது மகளுக்கு திருமணமாகிவிட்டது. 3வது மகன் கிப்சன்(22). மற்ற இருவர் படித்து வருகிறார்கள். கப்பல் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துள்ள கிப்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் ஏப்ரல் 24ம்தேதி மாலுமியாக வேலைக்கு சேர்ந்தார். அன்றே அவர் குஜராத்தில் இருந்து சரக்குகளுடன் துபாய் சென்ற கப்பலில் அனுப்பப்பட்டார்.

துபாய் அருகில் உள்ள ஒரு துறைமுகத்தில் சரக்குகளை இறக்கியபின், அங்குள்ள சரக்குகளை ஏற்றிக்கொண்டு 15ம்தேதி இரவு குஜராத்திற்கு கப்பல் புறப்பட்டது. அப்போது கப்பலில் உள்ள நிலைபடுத்தும் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கிப்சன் அதில் ஏறினார். 30 அடி ஆழம் கொண்ட அந்த தொட்டியில் அவர் இறங்கும்போது கால் தவறி உள்ளே விழுந்து விட்டார். இதில் தலையில் காயமடைந்த அவருக்கு கப்பலில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு துபாய் துறைமுகத்திற்கு தொடர்பு கொண்டு மீட்பு படகு அனுப்பும்படி கப்பல் கேப்டன் தகவல் தெரிவிக்கவே அங்கிருந்து மருத்துவ வசதிகள் கொண்ட படகு விரைந்து வந்தது. அதில் கிப்சனை ஏற்றி துபாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கப்பல் நிர்வாகம் மற்றும் இந்திய தூதரகம் மூலம் நேற்று காலை புன்னகாயலில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மகன் இறந்த செய்து கேட்டு கதறி அழுதனர். உடலை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கினர். உடனே புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் சங்க தலைவர் அமல்டன், பொருளாளர் சோரீஸ் மற்றும் நிர்வாகிகள், கிப்சன் பெற்றோரை அழைத்துக்கொண்டு நேற்று தூத்துக்குடி சென்று கலெக்டரிடம் உடலை பெற்று தருமாறு மனு அளித்தனர். இதுபோல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிருநாட்களில் கிப்சன் உடல் தூத்துக்குடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் கப்பல் மாலுமி ஒருவர் இறந்த சம்பவம் அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Dubai , Punnakkayal, navigator
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...