×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குக்கான 12,915 விண்ணப்பங்கள் நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில்  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதை எதிர்த்து, சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
 தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் எனவும், ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தின் விதிகள் உள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை. சிறு காரணங்களுக்காக தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர்களான போலீசாரின் 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் முழுமையாக பதிவான தகவலை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தபால் வாக்குகள் பதிவானது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் வி.அருண் ஆஜராகி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் தரவேண்டும். ஆனால், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை தந்துள்ளனர். இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வரும் காலத்திலாவது இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.
 அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்  காவல்துறையினர் என 4 லட்சத்து 35 ஆயிரத்தி 3 பேருக்கு தபால் வாக்கு அளிக்க படிவங்கள் வழங்கப்பட்டன.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட  படிவங்களில் தொகுதி, பாகம் எண், வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை சரியாக குறிப்பிடாத மற்றும் தேர்தல் ஆணைய டேட்டாபேசுடன் பொருந்தாத 12,915 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தபால் ஓட்டுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணைய தளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும். வருங்காலத்தில் தபால் ஓட்டுகள் பதிவில் இதுபோன்ற குழப்பங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். தபால் வாக்கு விவரங்களை 2 நாட்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்



Tags : Government employees, teacher, postal ballot, rejection, high court, election commission
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...