×

தேர்தல் பிரசாரம் முடிந்ததும் டெல்லியில் மோடி, ராகுல் போட்டி போட்டு பேட்டி

புதுடெல்லி: மக்களவை இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை முடிந்ததும், பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் போட்டி போட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது இதுவே முதல் முறை. நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.  இறுதிக்கட்ட பிரசாரம் என்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டார். இருவரும் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்ததும், உடனடியாக டெல்லி திரும்பி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். முதலில், பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது.

இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், பிரதமரான பிறகு கடந்த 5 ஆண்டுகளில், அவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதே கிடையாது. நாடாளுமன்றத்துக்கு வரும்போதும் மட்டும் தனது கருத்துக்களை நிருபர்களிடம் தெரிவித்து விட்டு செல்வார். கேள்விகளை எதிர்கொள்ள மாட்டார். பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பு என்றதும், டெல்லியில் உள்ள நிருபர்கள் எல்லாம், பாஜ தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை படையெடுத்தனர். ஆனால், இந்த சந்திப்பில் மோடி தான் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை மட்டும் தெரிவித்துவிட்டு, ‘‘இது பாஜ தலைவர் அமித்ஷா ஏற்பாடு செய்த நிருபர் சந்திப்பு. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார்,’’ என கூறிவிட்டு மோடி அமைதியாக இருந்தார். முன்னதாக மோடி கூறுகையில், ‘‘பாஜ தேர்தல் பிரசாரம், கடந்த தேர்தலைவிட இந்த முறை சிறப்பாக இருந்தது. பாஜ மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்,’’ என்றார்.

இதேபோல், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை தனியாக சந்தித்த ராகுல், ‘‘மக்களின் மனநிலை 23ம் தேதி தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி, தேர்தல் முடிவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார். ஊழல் கறைபடியாதவர் என கூறப்பட்ட மோடியின் மாயையை நாங்கள் முடிந்தவரை கலைத்தோம். பாஜ அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். தேர்தல் ஆணையம், பிரதமருக்கு சாதகமாக செயல்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து அடுத்த ஆட்சியை அமைப்போம்,’’ என்றார்.

Tags : election campaign ,Modi ,race ,Rahul , Election campaign, Delhi, Modi, Rahul, interview
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...