×

ஊட்டி மலர் கண்காட்சி துவங்கியது சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: 5 நாட்கள் நடக்கிறது

ஊட்டி: ஊட்டியில் 123-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது.  இதைக்காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கண்காட்சியில் ஒன்றரை லட்சம் கொய் மலர்களை கொண்டு நாடாளுமன்ற கட்டிடமும், 3 இடங்களில் `செல்பி’ ஸ்பாட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடைகாலத்தின்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஏனெனில், ``மலைகளின் அரசி’’ என்று வர்ணிக்கப்படும் ஊட்டியில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், ஏரிகள், அணைகள், பள்ளதாக்குகள் மற்றும் புல்வெளிகள் என்று 30 சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை காண்பதற்காகவே நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். ஆனால், கோடை சீசனின்போது, சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 123-வது மலர் கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று தொடங்கி வைத்தார். விழாவில், தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தார். கூடுதல் முதன்மை செயலாளர் ராஜகோபால், மலை பயிர் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 5 நாட்கள் நடக்கிறது: ஐந்து நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 84 அடி நீளம் 21 அடி உயரம், 25 அடி அகலம் கொண்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பிரமாண்ட மலர் கூடை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் துலிப் மலர்களை கொண்டு 3 இடங்களில் மலர்கள் சூழ்ந்த ‘செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனால், பலரும் மலர் அலங்காரம் அருகே நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.

பழங்குடியினர் நடனம்
123-வது மலர் கண்காட்சி தொடக்கவிழாவில் பழங்குடியினர் நடன நிகழ்ச்சிகள், படுகர் இன மக்களின் நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சியை காண, பல ஆயிரம் பேர் திரண்டதால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தொட்டபெட்டா மற்றும் பைக்காரா செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Tags : Ooty Flower Exhibition ,arrival , Ooty Flower Exhibition, Tourist Traveler
× RELATED புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு