×

22 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் எடப்பாடி ஆட்சி தானாகவே கவிழும்: அரவக்குறிச்சி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

கரூர்: ``இடைத்தேர்தலின் 22 தொகுதியிலும் 23ம் தேதி, தி.மு.க. வெற்றி பெற்று நேரடியாக  ஆட்சிக்கு வரும்’’ என்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று நிறைவு பெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் 12 இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக காலை 8 மணிக்கு அவர் கரூரில் இருந்து வேனில் புறப்பட்டார். 8.15 மணிக்கு புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி தடா கோவிலில் வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார். அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலில், நீங்கள் எல்லாம் மோடி இன்னும் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கக்கூடாது என்பதற்காக வாக்களித்து இருக்கிறீர்கள். கரூரில் ஜோதிமணிக்கு வாக்களித்து உள்ளீர்கள்.

அதுபோல மோடிக்கு எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. 19ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் நீங்கள் எல்லாம் உதயசூரியனில் வாக்களித்து அந்த கடமையை நிறைவேற்றுங்கள். முதல்வர் எடப்பாடி ஊர் ஊராக போய், அதிமுக ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என சொல்கிறார். நாங்கள் கலைக்கப்போவதில்லை. அதிமுக ஆட்சி தானாக கவிழும். எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது அவருக்கே தெரிந்து விட்டது. சட்டமன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு 97 இடங்கள் உள்ளது. ஏற்கனவே நடந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும், இப்போது நடைபெறும் 4 தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றிபெறும். 23ம் தேதி இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அப்போது 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றி பெறும். இப்போதுள்ள 97 சீட்டுகளுடன் 22 சீட்டுகளும் கிடைத்தால் 119 சீட் பெற்று தி.மு.க. மெஜாரிட்டி ஆகிவிடும். எடப்பாடி அரசு தானாக கவிழ்ந்து விடும். எனவே 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது உங்கள் பிரச்னை தீர்த்து வைக்கப்படும்.

உங்களுக்காக எம்.எல்.ஏ.வாகி கடமையாற்ற செந்தில்பாலாஜி காத்திருக்கிறார். அவர் வெற்றிபெற்றால் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகள் பிரித்து அதற்கு மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்படும். அரவக்குறிச்சியில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்படும். முருங்கைக்காய் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு உருவாக்கப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தடுப்பு அணைகள் கட்டப்படும். செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையம் இங்கு உருவாக்கப்படும். இப்போது செயல்பட்டு வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாளாக உருவாக்கப்படும். அதற்கான சம்பளம் வங்கிகளில் போய் வாங்கும் நிலை மாற்றி நீங்கள் வேலை செய்யும் இடத்திலேயே வாரந்தோறும் வழங்கப்படும். ஏழைகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அடகு வைத்து திருப்ப முடியாத நிலையில் உள்ள 5 பவுன் வரையிலான தங்க நகை கடன்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும். கல்விக்கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இது மட்டுமல்லாமல் மக்களவை தேர்தலின்போது பல வாக்குறுதிகளை அளித்துள்ளோம். பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். 50 லட்சம் பேருக்கு மக்கள் நலப்பணியாளர் பணி வழங்கப்படும். 1 கோடி பேருக்கு சாலை பணியாளர் பணி வழங்கப்படும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். கருணாநிதி சொன்னதை செய்வார். செய்வதை சொல்வார். அவரது மகனான ஸ்டாலினும் சொன்னதை செய்வார், செய்வதைத்தான் சொல்வார். எனவே உங்களுக்காக உழைக்க உதயசூரியனில் வாக்களித்து செந்தில்பாலாஜிக்கு வெற்றிதேடித்தாருங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நேரடியாக ஆட்சிக்கு வரும்: இதைத்தொடர்ந்து,  வெஞ்சமாங்கூடலூர், வேலாயுதம்பாளையும், தோட்டக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய இடங்களில் செந்தில்பாலாஜிக்கு வாக்கு சேகரித்தார். இறுதியாக, அரவக்குறிச்சியுடன்  பிரசாரத்தை நிறைவு செய்தார். அரவக்குறிச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: ``தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகிறது. ஜெயலலிதா இறந்த பிறகு அந்த கட்சி 3 பிரிவுகளாக பிரிந்தது. இதனால் அதிமுக மைனாரிட்டி ஆட்சியாக மாறியது.

அப்போது இந்த ஆட்சியை மத்திய அரசு கவிழ்த்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரும் என்று பேசினர். திமுக எப்போதும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது. வரும் 23ம் தேதிக்கு பிறகு நேரடியாக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். மே 23க்குபிறகு 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெருபான்மையுடன் நாம் ஆட்சிக்கு வந்து இவர்களை வீட்டிற்கு அனுப்புவோம்.  வரும் 23ம் தேதி எடப்பாடிக்கு முட்டுக்கொடுத்த மோடியும் வீட்டுக்கு போய்விடுவார். அதன் பிறகு மத்தியில் ராகுல் தலைமையில் ஆட்சி அமையும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும். எனவே, வரும் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வாக்குசாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்’’. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : regime ,campaign ,MK Stalin , 22 constituencies, the DMK, the victor, the Ettipadi regime, will automatically fall off, MK Stalin
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...