×

சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் எவ்வளவு?... தகவலை வழங்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து பெறப்பட்ட கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க, ரகசியத்தன்மையை காரணம் காட்டி மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, தனது தலைமையிலான அரசு அமைந்தால், சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றாதது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ‘சுவிட்சர்லாந்தில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் இந்தியா கொண்டு வரப்பட்டது? அங்குள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர் அல்லது இந்திய நிறுவனங்களின் விவரங்கள், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’  என்பது போன்ற விவரங்களை அளிக்க கோரி செய்தியாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.

இதற்கு, மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ‘கருப்பு பணம் பற்றி சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசிய விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் ஒவ்வொரு கருப்பு பண விவகாரம் பற்றிய தகவல்களையும்  இந்தியா-சுவிட்சர்லாந்து அரசுகள் பகிர்ந்து வருகின்றன. வரி விவகாரங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த 2016 நவம்பரில் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி, நிதி கணக்கு பற்றிய தகவல்களை தானியங்கி முறையில் பகிர்ந்து கொள்ள இருநாடுகளும் சம்மதித்துள்ளன. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு, அடுத்து வரும் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல் அளிக்கப்பட உள்ளது.

அதன் அடிப்படையில், 2019ம் ஆண்டு முதல் முறையாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்தியர்களின் கணக்கில் வராத வருமானம், சொத்துகள் கண்டறியப்பட்டு வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியா, வெளிநாடுகளில் இந்தியர்கள் எவ்வளவு கருப்பு பணம் வைத்துள்ளனர் என்பதை ஆராய்வதற்கு பொதுநிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசிய நிறுவனம், தேசிய பயன்பாட்டிற்கான பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு, தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றைக் கொண்டு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2011ம் ஆண்டு கமிஷன் ஒன்றை நிறுவியது. இந்த மூன்று அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே 2013 டிசம்பர், 2014 ஜூலை, 2014 ஆகஸ்ட் மாதங்களில் 3 அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தன. அவை நாடாளுமன்ற குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.

அது பற்றிய தகவல்களை கூறுவது நாடாளுமன்றத்தின் சிறப்பு உரிமைகளை மீறுவதாகும். அவற்றின் நகல்களையும் வழங்க முடியாது. அந்த அறிக்கைகளும் அவற்றின் மீதான அரசின் பதில்களும் நிதி நிலைக்குழுவில் தாக்கல் செய்யப்படுவதற்காக மக்களவை தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு ஆய்வின் போதே இந்தியா, வெளிநாடுகளில் எவ்வளவு கருப்பு பணம் உள்ளது என்பதை பற்றி கூற முடியாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

‘எவ்வளவு என தெரியாது’
மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதிலில் மேலும், ‘இதுவரை எவ்வளவு கருப்பு பணம் இந்தியா, வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளது என்பது பற்றிய கணக்கு இல்லை. அதே சமயம், பிரான்ஸ் நாட்டில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், எச்எஸ்பிசி வங்கி கணக்கு விவகாரத்தில் 427 கணக்குகளின் மதிப்பீட்டு ஆய்வு, இந்தோ-பிரான்ஸ் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் முடிவடைந்துள்ளது. இதில் வெளிநாடுகளில் பதிவு செய்யப்படாத வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள, கணக்கில் வராத ரூ. 8,465 கோடிக்கு வரி விதிக்கப்பட்டது. இது தவிர, மேற்கூறிய 427 கணக்கில் 162 கணக்குகளுக்கு மறைமுக அபராதத் தொகையாக ரூ. 1,291 கோடி வரி விதிக்கப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது.

Tags : banks ,Swiss ,Indians ,government , Swiss banking, Indian, black money, federal government, denial
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...