×

ஆண்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினரை தாக்கிய அமமுக பிரமுகர்கள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆண்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.1.48 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ய சென்றபோது அவர்களை தாக்கிய வழக்கில் அமமுகவை சேர்ந்த 3 பேருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 16ம் தேதி ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு டிராவல்ஸ் அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி கண்ணகி தலைமையில் ஆண்டிப்பட்டி எஸ்பி, டிஆர்ஓ, சப்-கலெக்டர், வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றனர். டிராவல்ஸ் நிறுவனத்தின் அறையின் உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்த அதிகாரிகள் அந்த அறையை திறக்க முடிவு செய்தனர்.

அப்போது, அமமுகவை சேர்ந்த சுமார் 150 பேர் அங்கு வந்து அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன் அவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர். இதையடுத்து, ஆண்டிப்பட்டி ஆர்டிஓ உத்தரவின் அடிப்படையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் அந்த அறையில் நடந்த சோதனையில் ரூ.1 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக  அமமுகவைச் சேர்ந்த பழனி, சுமன்ராஜ்,  பிரகாஷ்ராஜ், மது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி பழனி உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல் பி.சந்திரசேகர் ஆஜராகி, அரசியல் காரணங்களுக்காக மனுதாரர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும்கட்சியின் தூண்டுதலால் அமமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர்கள் அடுத்த உத்தரவு வரும்வரை  சென்னையில் தங்கியிருந்து மயிலாப்பூர் போலீசில் தினமும் காலை 10.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தப்பி ஓடக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Supreme Court ,Amritsar , Andipatti, Election Fly Force, Ammukh, Conditional Bail, High Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...