×

குடிமகன்கள் ஓய்விடமாக மாறிய அனகாபுத்தூர் பேருந்து நிலையம்

பல்லாவரம்: அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரித்து வருவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரி, வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அனகாபுத்தூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, தி.நகர், அஸ்தினாபுரம், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக இந்த பேருந்து நிலையத்தில் குடிமகன்கள் மது அருந்துவதுடன், போதையில் அங்கேயே மயங்கி கிடக்கின்றனர். மேலும், ஆதரவற்றோர், மனநோயாளிகள் ஆகியோரும் பஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனால், பயணிகள் பஸ் நிலையத்தினுள் செல்லாமல், பஸ்சுக்காக சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அனகாபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலுட்டும் அறையை ஆக்கிரமித்து, தனிநபர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதால், தாய்மார்கள் அந்த அறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Anakaputhur ,citizens ,resident , Anakaputhur bus stand, which became,resident of the citizens
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி