×

துபாய், இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தல் ரூ2 கோடி தங்கம் பறிமுதல்: 24 குருவிகள் சிக்கினர்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 2.45 மணிக்கு கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 12 பேர் ஒரு குழுவாக இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தனர். அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இலங்கையை சேர்ந்த முகமது மூனஸ் (38),  புதுக்கோட்டையை சேர்ந்த கலந்தர் சாகுல் அமீது (21),  சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் (48), ராமநாதபுரத்தை சேர்ந்த இமாம்பாபு (35) உள்பட 12 பேர்களை சோதனையிட்டனர். அப்போது இவர்கள் அனைவரின் உள்ளாடை மற்றும் ஆசனவாய்க்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 12 பேரிடம் இருந்து 3 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.1 கோடி. 12 பேரையும் கைது செய்தனர். தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நேற்று காலை 5 மணிக்கு துபாயில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிலும் 12 பேர் ஒரு குழுவாக வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மும்பையை சேர்ந்த பர்சனா பேகம் (37), சென்னையை சேர்ந்த சுல்தானா (34) என்ற 2 பெண்கள் உள்பட 12 பேரை சோதனையிட்டபோது உள்ளாடைகளில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 3 கிலோ மதிப்புடைய ரூ. 1 கோடி தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 12 பேரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்திய சோதனையில் 24 பயணிகளிடம் இருந்து 2 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சர்வதேச தங்கம் கடத்தும் கடத்தல் குருவிகளாக செயல்பட்டது தெரியவந்தது. இவர்களை இந்த கடத்தலில் ஈடுபடுத்திய முக்கிய சர்வதேச குற்றவாளிகள் யார் என அவர்களிடம் விசாரித்து  அவர்களை தேடிவருகின்றனர்.

Tags : Dubai ,Sri Lanka , Dubai, Sri Lanka, Chennai, gold seizure
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...