×

அங்கீகாரம் ரத்தான மருத்துவ கல்லூரி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லூரில் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்திய மருத்துவக் கல்லூரியின் விதிகளையும், நிபந்தனைகளையும் செயல்படுத்தவில்லை என கூறி கல்லூரியின் அங்கீகாரத்தை மத்திய சுகாதார துறை ரத்து செய்து, கடந்த 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்தது. இந்நிலையில், இந்த கல்லூரியில் படித்துவரும் அர்ச்சனா உள்ளிட்ட 103 பேர் தங்களை வேறு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, மாணவர்கள் தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிராஜுதீன் வாதத்தில், “பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரிகளில்தான் சேர்க்க வேண்டும். மேலும், நீதிமன்றம் தலையிட்டு ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதேபோல், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கும் தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலாவதாக தங்களது விருப்பப்படி தனியார் கல்லூரிகளில் சேருவார்கள். பின்னர் அதன் கட்டமைப்பு சரியில்லை என்றால் அவர்களை அரசு கல்லூரிகளில் சேர்க்க வேண்டுமா. இதில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்த தடையும் விதிக்க முடியாது. அதனால் முந்தைய உத்தரவின் வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக அதனை செயல்படுத்துங்கள் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

Tags : High Court ,Supreme Court , Rated Medical College, High Court Order, Prohibition, Supreme Court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...