×

இருமல் மருந்தில் போதை பொருள் கலந்து விற்பனை : மெடிக்கல் கடைக்காரர் கைது

பெரம்பூர்: இருமல் மருந்தில் போதை பொருள் கலந்து விற்பனை செய்த மெடிக்கல் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி புது தெருவை சேர்ந்தவர்  முருகேசன் (35). இவர், ஓட்டேரி - குன்னூர் சாலையில்  மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.  இவரது கடையில் மாலை, இரவு நேரங்களில் இளைஞர்களின் கூட்டம்  அதிகளவில் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி எஸ்ஐ சையது முபாரக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மெடிக்கல் கடையில் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த இருமல் மருந்துகளில் சட்ட விரோதமாக போதை மருந்து கலந்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முருகனை கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருமல் டானிக்கில் இவரே போதை மருந்து கலந்து விற்பனை செய்தாரா அல்லது இவருக்கும், போதை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருமல் டானிக் பரிசோதனைக்காக இந்திய மருத்துவத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகுதான் இருமல் மருந்தில் கலக்கப்பட்ட போதை பொருளின் தன்மை, அதன் பாதிப்பு குறித்து தெரியவரும் என போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Sale of drugs , cough medicines,Medical shopkeeper arrested
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...