×

பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் தேக்கம் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் : மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளில் தேங்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால், பாதாள சாக்கடை அடைப்பை தற்காலிகமாக சரி செய்கின்றனர். ஆனால், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை அடைப்பால், அங்குள்ள வீடுகளில் கழிவுநீர் புகுந்தது. இந்நிலையில், பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னையை நிரந்தரமாக சரிசெய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று காலை வசந்தம் நகர் அருகே சாலை மறியல் செய்ய முடிவு செய்து ஒன்று கூடினர். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு பேசினர்.

ஆனால், பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் இங்கு வந்து பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தால்தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம், என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து குடிநீர் வழங்கல் வாரிய பகுதி பொறியாளர் விஜயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்கள், எங்கள் பகுதியில் வீட்டு வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வரிகளை தவறாமல் வசூல் செய்கிறீர்கள். ஆனால் பல நாட்களாக இங்கு பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Public disputation,sewage stabilizers,sewage sheds
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...