×

இருகட்சியினர் இடையே மோதல் தெ.தேசம், ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளர்கள் கைது

திருப்பதி: திருப்பதி அருகே தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் இருக்கட்சி வேட்பாளர்களையும் போலீசார் கைது செய்தனர். மோதல் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 11ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குண்டூர், பிரகாசம், நெல்லூர் மாவட்டத்தில் பல்வேறு காரணத்தினால் 5 வாக்குச்சாவடி மையத்திற்கு கடந்த மாதம் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி தொகுதியில் நடை பெற்ற தேர்தலில் கம்மகண்டிகை, புலிவர்த்திபள்ளி உட்பட 7 வாக்குச்சாவடி மையங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விடாமல் இடையூறு செய்ததாக அக்கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி மாநில தேர்தல் அலுவலர் கோபாலகிருஷ்ண திரிவேதியிடம் புகார் அளித்தார். இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்க விடாமல் இடையூறு செய்ததாக அக்கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே தேர்தல் ஆணையம் சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கம்ம கண்டிகை, புலிவர்த்தி பள்ளி உட்பட 5 வாக்குச்சாவடி மையத்திற்கு மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்றும், தெலுங்கு தேசம் புகார் அளித்த 2 வாக்குச்சாவடி மையங்களையும் சேர்த்து 7 மையங்களிலும் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி, தெலுங்கு தேசம் வேட்பாளர் நானி ஆகியோர் நேற்று முன்தினம் திருப்பதி சப்-கலெக்டர் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கம்ம பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் தாக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு ஆறுதல் கூற சந்திரகிரி தொகுதி எம்எல்ஏவும் வேட்பாளருமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி சென்றார். அப்போது அவரை அப்பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த சந்திரகிரி தொகுதி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் நானியும் அங்கு வந்ததால் மேலும் பதற்றம் அதிகரித்தது. 2 கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, ஏற்பட்டு மோதல் உருவானது. தகவல் அறிந்த திருப்பதி எஸ்பி அன்புராஜன் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தியும் இருக்கட்சியினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் வேட்பாளர் நானி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.  பின்னர் அவர்கள் இருவரையும் விடுவித்தனர்.

பொதுமக்கள் அச்சம்

சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 5 வாக்குச்சாவடி மையங்களில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நாளன்று என்ன நடக்குமோ என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


Tags : conflict ,T. ,YSRCong , Conflict, two sides is T., YSRCong. Candidates arrested
× RELATED கார் தொழிற்சாலை தொடங்குகிறார் எலான்...