×

விமானம் மூலம் சென்னை வந்து கைவரிசை 4 ஆண்டுகளாக ரயிலில் நகை, பணம் திருடி மலேசியாவில் நட்சத்திர ஓட்டல் நடத்தியவர் கைது

* 7 மொழிகளில் சகஜமாக பேசி நூதனம்
* 110 சவரன் நகை பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை குறிப்பாக, ஏசி முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் தொடர்ந்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுப்போவதாக ரயில்வே போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதையடுத்து, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் டிஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் ரயில்வே எஸ்பி ரோகித் நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன், கயல்விழி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
கடந்த 7ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக டிப்டாப் உடை அணிந்து நின்று கொண்டிருந்த நபரை ரயில்வே போலீசார் அழைத்து விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். உடனே, அவரை சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது:  எனது பெயர் சாகுல் ஹமீது (39), சொந்த ஊர் கேரள மாநிலம், திருச்சூர் பகுதி. குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறேன். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஏசி முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து சக பயணிகள் போல் பயணம் செய்வேன். ரயில் புறப்பட்டதும் சிறிது நேரத்தில் பயணிகளிடம் பேச ஆரம்பிப்பேன். எனக்கு மலையாளம், தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி போன்ற 7 மொழிகள் தெரியும் என்பதால் உடன் வரும் பயணிகளிடம் சகஜமாக பேசிவிடுவேன்.
அதன்பிறகு அவர்கள் நன்றாக தூங்கியதும் அவர்கள் வைத்திருக்கும் பையை எடுத்து அதில் உள்ள நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துவிட்டு திரும்பவும் பையை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு சென்று விடுவேன்.

ரயிலில் திருடப்படும் நகைகளை திருச்சூர், மும்பை போன்ற பகுதிகளில் உள்ள முக்கியமான நகைக்கடைகளில் விற்பனை செய்து அந்த பணத்தை வைத்து மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் மனைவி சஹானாவுடன் சேர்ந்து நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறேன். இதுபோன்று தொடர்ந்து 4 வருடங்கள் ரயிலில் திருடி வந்த நிலையில் தற்போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் தேடி வந்த நபர்தான் கைதான சாகுல்ஹமீது என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் பயணிகளிடம் திருடி விற்பனை செய்த கடைகளுக்கு சென்று 110 சவரன் நகைகளை மீட்டனர்.

டிடிஆர் கொடுத்த தகவல்

ரயில் பயணிகளிடம் தொடர்ந்து கைவரிைச காட்டி வந்த சாகுல் ஹமீது பிடிபட்டது குறித்து, டிஐஜி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயிலில் தொடர்ந்து பெண்களிடம் நகை, பணம் திருடு போவதாக புகார்கள் வந்தது. இதை தடுக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடினர். இந்நிலையில் டிடிஆர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த 7ம் தேதி கடந்த 4 ஆண்டுகளாக ரயிலில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரயிலில் திருடிய நகையை விற்பனை செய்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நட்சத்திர ஓட்டல் நடத்துவதாக கூறியுள்ளார். இவர் மீது ஏற்கனவே நாக்பூர், திருச்சூர் பகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்குகளும், தற்போது 29 திருட்டு வழக்குகளும் உள்ளன.

மேலும் இந்த திருட்டு வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தப்படும். மேலும் நகைகளை வாங்கியவர்களிடம் அடுத்தபடியாக விசாரணை செய்யப்படும். மலேசியாவில் உள்ள ஓட்டலில் வேறுவிதமான தொழில்கள் நடத்துவதாகவும் கூறுகின்றனர். அதை பற்றியும் விசாரணை செய்யப்படும். ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சந்தேகப்படும் படியாக யாரேனும் இருந்தால் உடனடியாக ரயில்வே போலீசாருக்கோ அல்லது 1512 எண்ணிற்கோ, ரயில்வே ஆப், சிஆர்பி மொபைல் ஆப் போன்றவற்றுக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்று திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க முடியும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

கொள்ளையனை கண்டுபிடித்தது எப்படி?

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஏசி பெட்டியில் திருட்டு சம்பவம் நடைபெற்ற நாட்களில் பயணம் செய்த நபர்களின் பெயர் பட்டியலை ரயில்வே நிர்வாகத்திடம் பெற்று அதன்படி விசாரணை செய்த போது திருட்டு சம்பவம் நடந்த தேதிகளில் சாகுல்ஹமீது என்ற பெயரில் அடிக்கடி டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாகுல் ஹமீது மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி குற்றவாளியை தேடிவந்தனர்.


Tags : jewelery , Man arrested ,stamping jewelery, jewelery
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...