×

அரவக்குறிச்சி, சூலூர் உள்பட 4 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது... நாளைமறுதினம் வாக்குப்பதிவு

அரவக்குறிச்சி: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி அறிவித்தது. இந்த 4 தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 பேர், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேர், ஓட்டப்பிடாரத்தில் 15 பேர், அரவக்குறிச்சியில் 63 பேர் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகிறார்கள். 4 தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுகிறது.

இந்த தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களும் கட்சியினருடன் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையாடினர். தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதையே மிஞ்சும் வகையில் பிரசாரத்தில் அனல் பறந்தது.

இந்நிலையில் இந்த 4 தொகுதிகளிலும் இன்று (17ம் தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. கடைசி நாளான இன்று இறுதிக்கட்ட பிரசாரம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரவக்குறிச்சி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். காலை 8 மணிக்கு தடாகோயிலில் பிரசாரத்தை துவக்கிய அவர், மாலை 5 மணிக்கு புங்கம்பாடி கார்னரில் முடித்தார். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் வந்து தங்கியிருக்கும் கட்சியினர் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்குள் இருக்க கூடாது என்று அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவிட்டனர். இதனால் இன்று மாலையில் இருந்து தொகுதிகளில் முகாமிட்டிருந்த வெளியூர்காரர்கள் வெளியேறினர். இந்த 4 தொகுதியுடன், தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளிலும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகின்றன.

Tags : constituencies ,vote ,Sulur ,Aravakurichi , Campaign, voting
× RELATED 71 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு பீகாரில் முதல் கட்ட பிரசாரம் ஓய்ந்தது