×

ஏற்காடு இரட்டை கொலையில் கைதானவரை காட்டுக்குள் அழைத்து சென்று விசாரணை

சேலம்: ஏற்காட்டில் இரட்டை கொலையில் கைதான வாலிபர் மேலும் இரண்டு கொலைகளை செய்திருப்பதாக கூறியதையடுத்து அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுவனை எரித்த இடத்தில் தடயங்கள் கிடைக்காததால் 2வது நாளாக தேடி வருகின்றனர். ஏற்காட்டில் உள்ள தெப்பக்காட்டை சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன்(26). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7ம்தேதி காட்டுப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த முதியவர் பெரியானையும், விறகு எடுத்துக்கொண்டிருந்த மூதாட்டி வெள்ளையம்மாள் ஆகியோரையும் காட்டுப்பகுதியில் வைத்து கல்லால் தாக்கி கொலை செய்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஏற்காடு போலீசார், சரவணனை கைது செய்தனர். மதுகுடித்தால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அவர் போலீசாரிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்தார்.

மேலும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரில் நண்பர் சரவணனையும், ஏற்காட்டில் ஜெயபால்(10) என்ற சிறுவனையும் கொலை செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சரவணன், ஜெயபால் ஆகியோரின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் ஜெயபாலின் பெற்றோர் மகனை எல்லா இடங்களிலும் தேடி வந்துள்ளனர். அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் குறிகேட்டுள்ளனர். அவர்கள், ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், விரைவில் ஊர் திரும்புவான் என கூறியுள்ளனர். இதனை நம்பி இவர்கள் மகன் திரும்ப வருவான் என காத்திருந்துள்ளனர். தற்போது மகன் கொலை செய்யப்பட்டான் என்ற தகவலால் அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதே போல திருவாரூரில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சரவணன் பெற்றோரும் அதிர்ச்சியில் உள்ளனர். மரவேலைக்காக கொலைகார சரவணனும், கொல்லப்பட்ட சரவணனும் திருவாரூர் சென்றுள்ளனர். அப்போது தூங்கிக்கொண்டிருந்த சரவணனை கழுத்தை நெரித்து கொன்று, ஆற்றில் வீசிவிட்டதாக கூறியுள்ளார். இவரது பெற்ேறாரை திருவாரூர் போலீசில் புகார் செய்யுமாறு ஏற்காடு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக விசாரணை நடத்த, சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரவணனை இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் கணேசன் அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று மாலை சரவணனை அழைத்துக்கொண்டு சிறுவன் ஜெயபால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். சிறுவனை கொன்று எரித்து விட்டதாக கூறினார். அடர்ந்த காட்டுப்பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினர். தற்போது அந்த இடம் முழுவதும் காடாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் உதவியுடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடினர். ஆனால் எலும்பு கூடுகள் கூட கிடைக்கவில்லை. 8ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததால் தடயங்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். என்றாலும் 2வது நாளாக தடயங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கைதி சரவணனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : Yercaud ,twin murder ,detainee ,forest , Murder, investigation, Yercaud
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து