×

குடியாத்தம் அருகே மழையுடன் சூறைக்காற்று ஆயிரக்கணக்கான வாழை சேதம்

வேலூர்: குடியாத்தம் அருகே மழையுடன் கூடிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்தன. இவற்றுக்கு அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்றும் வீசுகிறது. இரவில் புழுக்கம் காரணமாக மக்கள் தூக்கத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதேபோல் நேற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம், வலசை, கொட்டமிட்டா, சைனகுண்டா, கீழ்கொல்லப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் மழையுடன் சூறைக்காற்று வீசியது. கடுமையான காற்று காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாயின. மேலும் தென்னை மரங்கள், மாமரங்களும் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததர் சில இடங்களில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தற்போது அரசு தடைவிதித்துள்ளதால் வாழை இலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் குடியாத்தம் ஒன்றியத்தில் பல விவசாயிகள் வாழையை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய மழையால் வாழை மரங்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : rains ,Gudiyatham , Gudiyattam, Rain, Cyclone
× RELATED வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல்...