×

நாடு முழுவதும் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 2 மாதமாக நடந்த 17வது மக்களவை தேர்தல் பரபரப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இன்று மாலையுடன் 7ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் ஓய்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 59 பதவிகளுக்கு 918 பேர் போட்டியிடுகின்றனர். வன்முறை ஏற்பட்டதால் மேற்கவங்கத்திற்கு 710 கம்பெனி படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 12ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 19) நடைபெறவுள்ளது. அதன்படி 7 மாநிலம் மற்றும் 1 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட பீகாரில் 8 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், சண்டீகரில் ஒரு தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 13 தொகுதிகள், இமாசல பிரதேசத்தில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், கொல்கத்தாவில் பாஜ தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பேரணி நடைபெற்றபோது ஏற்பட்ட வன்முறையால், நேற்றுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உத்தரவிட்டது. இதனால், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளைத் தவிர, மற்ற 50 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. இறுதிகட்ட பிரசாரம் என்பதால், தலைவர்கள் தங்களது மேற்கண்ட தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஏற்கெனவே நடந்து முடிந்த 6 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகளும் சேர்த்து, வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், 7ம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 918 வேட்பாளர்களில், 170 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், 9 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரம் குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்காததால் அவர்களை தவிர்த்து மீதமுள்ள 909 வேட்பாளர்களை மட்டும் கணக்கில் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில், 127 வேட்பாளர்கள் மீது தீவிரம் வாய்ந்த குற்றவழக்கும், 5 பேர் மீது குற்றம் நிரூபனம் செய்யப்பட்டும், 12 பேர் மீது கொலைக் குற்ற வழக்கும், 34 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 7 பேர் மீது ஆள்கடத்தல் தொடர்பான வழக்கும், 20 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றம், வரதட்சனை கொடுமை வழக்கும் உள்ளன. மேலும், மொத்த வேட்பாளர்களின் சொத்து மதிப்பில், ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாக 32 சதவீதம் பேரும், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை 25 சதவீதம் பேரும், ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை 22 சதவீதம் பேரும், ரூ. 5 கோடிக்கு மேல் 11 சதவீதம் பேரும், ரூ. 2 முதல் ரூ. 5 கோடி வரை 10 சதவீதம் பேரும் தங்களது விபரங்களை அபிடவிட்டில் தெரிவித்துள்ளனர். அதேபோல், 89 சதவீத ஆண் வேட்பாளர்களும், 11 சதவீத பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவர்களில், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 44 சதவீதம் பேரும், பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் 48 சதவீதம் பேரும், கல்வியறிவு இல்லாதவர்கள் 3 சதவீதம் பேரும், கல்வியறிவு உடையவர்கள் 3 சதவீதம் பேரும் போட்டியிட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற வன்முறையால், மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. அதனால், தேர்தலை அமைதியாவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு 9 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் துணை ராணுவப் படையினரின் 710 கம்பெனி படைகள் (ஒரு கம்பெனி படைக்கு 80 முதல் 100 வீரர்கள் இருப்பர்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேபோல், மற்ற மாநிலங்களில் நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதமாக நாடுமுழுவதும் 17வது மக்களவை தேர்தலுக்கான பரபரப்பு இருந்த நிலையில், அது தற்போது இறுதிகட்டத்தை எட்டி, இன்றுடன் பிரசாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது.

Tags : Campaign ,country ,election , Campaign, election, voting
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...