தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மதுக்கடைகளை இன்று மாலை முதல் மூட உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுதினம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின் போது சர்ச்சைக்குள்ளான 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று மாலை 6 மணியுடன் இந்த 4 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்கிறது. 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 15,939 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதில் மத்திய பாதுகாப்பு படையினர் 1,300 பேரும், தேர்தல் நுண் பார்வையாளர்களாக 1,364 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மதுக்கடைகளை இன்று மாலை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>