×

காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா சிங் கூறியதற்கு பிரதமர் மோடி கண்டனம்

கொல்கத்தா : காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா சிங் கூறியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் கருத்து குறித்து பிராச்சாரத்தில் பேசிய பிரக்யா சிங், கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு தேர்தல் மூலம் தக்க பாடம் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தவர் என்றும், அவர் எப்போதுமே தேசபக்தர் என்றும் கூறியிருந்தார். பிரக்யாவின் இந்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து டெல்லியில் பேசிய பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், கோட்சே குறித்த பிரக்யா சிங் தாக்கூரின் கருத்து ஏற்புடையது அல்ல என்றும், உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாக பிரக்யா சிங் தெரிவித்திருக்கிறார். மேலும் யாருடைய மனதையும் காயப்படுத்த நான் விரும்பவில்லை, யாரையும் காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன் என்றும், நாட்டிற்காக காந்தி ஜி செய்ததை மறந்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே கோட்சேவை தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் கூறிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தர மத்தியப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கார்கோன் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா சிங் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியது காந்தியை அவமதிக்கும் செயல் என்றும், சாத்வி பிரக்யா சிங் பேசியது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் மோடி கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு மின்சார தேவையை பாஜக பூர்த்தி செய்ததாகவும், மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


Tags : Modi ,Pragya Singh ,patriot ,Gandhi , Gandhi,Godse,Patriot,Prakya Singh,PM Modi
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...