×

திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகத்திருவிழா: பாதயாத்திரை பக்தர்கள் குவிகின்றனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாளை (18ம் தேதி) வைகாசி விசாகத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இத்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபத்தை சேருகின்றனர். அங்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்ததும் சுவாமி அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்கதேரில் எழுந்தருளி கோயிலை சேர்ந்தார். வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று (17ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

நாளை விசாக திருவிழாவன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு மூலவருக்கும், சண்முகருக்கும் உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைஅம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேருகிறார். அங்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இரவில் சுவாமி வசந்த மண்டபம் சென்று காட்சியருளி முனிகுமாரருக்கு சாப விமோசனமளித்து கோயிலை சேருகிறார். விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags : Visakathiravazhayam ,Tiruchendur ,devotees , Thiruchendur, Visakha Festival
× RELATED திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும்...