×

ஓடும் ரயிலில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பிரபல கொள்ளையன் சென்னையில் கைது!

சென்னை : தமிழகத்தில் ஓடும் ரயில்களில் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில்களில் ஒரு கும்பல் தொடர்ச்சியாக கொள்ளைடித்து வருவதாக புகார் அதிகரித்து வந்தது. கொள்ளையர்களை பிடிக்க ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் மாறுவேடத்தில் போலீஸ்காரர் ஒருவரும், பெண் போலீஸ் ஒருவரும் கணவன்-மனைவி போல சென்னையிலிருந்து சேலம் சென்ற ரயிலில் பணத்துள்ளனர். அப்போது நள்ளிரவில் ரயில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரின் பையை தூக்கி கொண்டு வாலிபர் தப்ப முயன்றுள்ளான். அவனை மாறுவேடத்தில் வந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் சாகுல் அமீது என்பதும், கேரளாவை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. ஏ.சி. முதல் வகுப்பு, 2ம் வகுப்பு பெட்டிகளில் பயணிகள் தூங்கும்போது கொள்ளையடிப்பேன் என்றும், குறிப்பாக பெண்களின் கை பையை எடுத்து சென்று விடுவான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் சாகுல் அமீது ரயில்களில் கொள்ளையடித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொள்ளையடித்த நகைகளை திருச்சூர், மும்பை நகை கடைகளில் விற்பனை செய்துள்ளான். அதன் மூலம் கிடைத்த ரூ.1 கோடியை வைத்து மலேசியாவில் ஓட்டல் வாங்கி உள்ளான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சாகுல் அமீது மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து ரயில்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக அவன் கூறியுள்ளான். கொள்ளையன் சாகுல் அமீது பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாக்பூர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளான். தமிழகத்தில் இதுவரை 30 பயணிகளிடம் கொள்ளையடித்துள்ளதாக கூறியுள்ளான். தமிழகத்தை போல வேறு மாநிலங்களிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளானா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், ரயில் பயணத்தின்போது பயணிகள் சந்தேகப்படும் வகையில் நபர்கள் நடமாடினால் அதுபற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள பயணிகளின் பாதுகாப்பு செயலிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : pirate ,hotel ,Malaysia ,Chennai , Running train,Robbery,Arrested,cailentira DGP Babu
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!