×

கோடை மழையால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு :  மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளதையடுத்து சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் வரத்து பாதியாக குறைந்தது.  ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடப்பது வழக்கம். சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள நாமக்கல், சேலம் மாவட்டத்தில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இதேபோல், மாடுகளை வாங்குவதற்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்கின்றனர். கோடை காலத்தில் நிலவும் வறட்சியால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதால் சந்தையில் விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

இந் நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் கடந்த வாரத்தில் இருந்து விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. வழக்கமாக, 500 பசு மாடுகள் விற்பனைக்கு வரும் நிலையில் நேற்று நடந்த  சந்தையில் 300 மட்டுமே வந்தது.
இதேபோல், கன்றுக்குட்டிகள் 100, எருமை 150 மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

 உள்ளூர் வியாபாரிகள் அதிகம் வந்த போதிலும் ஆந்திரா, தெலங்கானா மாநில மொத்த வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்ததால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Karangalpalayam , summer rain,karukanpalayam ,cow market
× RELATED நுழைவுத்தேர்வு என்ற பெயரில்...