×

சாரதா சிட் பண்ட் மோசடி விவகாரம்: ராஜீவ் குமார் மீது சிபிஐ சட்டப்படி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்ய விதிக்கப்பட்ட தடை 7 நாட்களுக்கு பிறகு விலக்கிக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 7 நாட்கள் கழித்து முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது சிபிஐ சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம்:

சாரதா நிதி நிறுவனம் மேற்கு வங்கத்தில் 239 தனியார் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தங்கள் திட்டங்களில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் எனக் கூறி லட்சக்கணக்கான சாமானிய மக்களிடம் இருந்து பெரிய தொகையை சாரதா நிறுவனம் வசூலித்தது. அவ்வாறு சுமார் 17 லட்சம் பேரிடமிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிய நிலையில், அதன் முறைகேடுகள் 2013ம் ஆண்டு அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து நிறுவனமே மூடப்பட்டது.

இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடியை விசாரிக்க முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையராக இருக்கும் ராஜிவ் குமார் தலைமையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அப்போது சிறப்பு விசாரணைக் குழுவை உடனடியாக அமைத்தது. அதனடிப்படையில், சாரதா நிறுவன தலைவர் சுதிப்தோ சென் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா, முன்னாள் டிஜிபி ரஜத் மஜும்தார், எம்பிக்கள் இருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராஜிவ் குமார் மீது வழக்குப்பதிவு:

இந்த நிலையில், இந்த வழக்கினை விசாரித்த ராஜிவ் குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்துக் கொண்டதாகவும் முக்கிய ஆவணங்களை அழித்ததாகவும் அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2014ம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது, மேற்கு வங்க காவல்துறை மற்றும் சிபிஐ இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதையடுத்து சிபிஐ மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து காவல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அதன்பின்னர் ராஜிவ்குமார் ஆதாரங்களை அழித்தார் என சிபிஐ தரப்பில் ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. வழக்கில், மேலும் சில தகவலை பெற, அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சிபிஐ கோரியிருந்தது.

தடை நீக்கம்... உச்சநீதிமன்றம் அனுமதி

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை 7 நாட்களுக்கு பிறகு கைது செய்ய தடை இல்லை என தெரிவித்தது. தடைக் காலம் முடிந்தபிறகு அவர் மீது சிபிஐ சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி வழங்குயுள்ளது.

Tags : Supreme Court ,CBI ,Rajiv Kumar , Sarada Sid Fund, Rajiv Kumar, CPI, Supreme Court
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...