×

உத்தமபாளையம் பகுதியில் விளைநிலங்களை அழித்து 4 வழிச்சாலை

*சர்வே பணி துவங்கியது


உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதிகளில் விளைநிலங்களை அழித்து நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக பைபாஸ்சாலை முதற்கட்டமாக சர்வே செய்து கற்களை நடும் பணி தொடங்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் நான்குவழிச்சாலை திட்டம் திண்டுக்கல் மாநிலநெடுஞ்சாலையில் இருந்து தேனி மாநில நெடுஞ்சாலைக்காக கடந்த 2009ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் தேவதானப்பட்டி - வத்தலக்குண்டு, வீரபாண்டி - கோட்டூர் சாலை, பணிகள் நடந்துள்ளன.

நான்கு வழிச்சாலை திட்டம் என பணிகள் நடந்தாலும், வாகனங்கள் அதிகளவில் செல்லாத நிலையில் இதனை இரண்டு வழிச்சாலையாக மாற்றி தேனி முதல் கம்பம் வரை பணிகள் நடந்துள்ளன. சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிக்காக பெரியகுளம் முதல் கம்பம் வரை ஆங்காங்கே பணிகள் நடந்துள்ளன. இவை தவிர நான்கு வழிச்சாலை திட்டம் வருகிறது எனக்கூறி 2009ம் ஆண்டு முதலே தேனிமாவட்டத்தில் பல நூறு ஏக்கர் நன்செய், மற்றும் புன்செய் நிலங்கள் கையப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் பைபாஸ் சாலை அமைக்கப்பட உள்ளன. முக்கியமாக கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனூர் அவுட்டர் பகுதிகளில் வரக்கூடிய கண்ணம்மாள் கோயில் பகுதிகளில் இருந்து விளைநிலங்களை அழித்து பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பைபாஸ் முடிகிறது. இதில் சுமார் 5.50 கிலோ மீட்டர் தொலைவு வருகிறது. தொடர்ந்து பாளையத்தில் பென்னிகுக் நர்சரி கார்டன் தொடங்கி அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அடுத்துள்ள பகுதி வரை சுமார் நான்கரை கி.மீ தூரம் பைபாஸ் சாலை வருகிறது. இதற்காக பொன் விளையும் பூமி என மக்களால் கொண்டாடப்பட்ட நெல்வயல்கள், அதிகமான தண்ணீர் ஊற்று உள்ள தென்னை தோப்புகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் விளைநிலங்களை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதிலும் நிலத்திற்கான இழப்பீட்டு தொகை தரப்பட்டுள்ளது.

ஆனால், இழப்பீட்டு தொகை போதாது என நீதிமன்றத்தில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நான்கு வழிச்சாலை தேனி முதல் கம்பம் வரை சென்றாலும், மாநில நெடுஞ்சாலையாக உள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலையாக போடப்பட்டுள்ளன.  எனவே, பைபாஸ் பணிகளில் தற்போது இதனை செயல்படுத்தும் மத்திய அரசின் நகாய் நிறுவனம் களமிறங்கி உள்ளது. குறிப்பாக பைபாஸ் சாலைகளை அமைத்திட தேவையான நடவடிக்கையை முதற்கட்டமாக தொடங்கி உள்ளது. இதற்காக முதற்கட்டமாக பாளையம் பென்னிகுக் கார்டன் பகுதியில் உள்ள நெல் விளையக்கூடிய நிலங்களில் பொக்லைன் மூலம் அழிக்கப்பட்டு சர்வே செய்யப்பட்டு வருகின்றன. இதன் சர்வே பணிகள் இன்னும் 20 நாட்கள் வரை நடக்க உள்ளன.

வருவாய்த்துறையினர் நிலம் கையகப்படுத்தி தந்துள்ள நிலையில் இதனை கிராம கணக்குகள், மற்றும் நில வரைபடம்(ஸ்கெட்ச்), மூலமாக சரிசெய்யும் பணி நடக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டபோது ஏற்கனவே சர்வே செய்து சர்வே கல் ஊன்றப்பட்டன. ஆனால் இவை 8 ஆண்டுங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் காணாமல் போய்விட்டதால் மீண்டும் இப்பணி தொடங்கி உள்ளது. பைபாஸ் சாலை தேனிமாவட்டத்தில் அமைக்கப்படும்போது விளைநிலங்கள் அழியக்கூடிய ஆபத்துக்கள் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `` நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 75 சதவீதம் வரை நிலஇழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்கள் கோர்ட்டை நாடி உள்ளனர். இதன் உத்தரவு வந்தவுடன் முழுவதுமாக நில இழப்பீட்டு தொகை வழங்கப்படும். தற்போது நான்கு வழிச்சாலை பைபாஸ் சாலைக்காக சர்வே கல் ஊன்றும் பணி நடக்க இருக்கிறது. சாலை அமைக்கும் பணி எப்போதும் தொடங்கும் என இதனை செயல்படுத்தும் நகாய் நிறுவனத்திடம்தான் கேட்கவேண்டும்’’
என்றனர்.

பசுமை பள்ளத்தாக்கு பாழாகும் அவலம்

தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கிற்கென தனி பெயர் உள்ளது. காரணம் பொறியாளர் பென்னிகுக் முல்லைபெரியாறு அணையை கட்டினார். சொந்த செலவில் கட்டிய அவர் தேனிமாவட்டம் மட்டும் அல்லாமல் 5 மாவட்ட விவசாயமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை கட்டினார். இதனால்தான் இன்றும் நெல்வயல்கள், தென்னை, காய்கறி விவசாயம் அதிக ஏக்கர் பரப்பில் செய்யப்படுகிறது.

தற்போது வீரபாண்டியில் இருந்து கம்பம், கூடலூர் வரை 7 இடங்களில் பைபாஸ் சாலை வருகிறது. இதில் பலநூறு ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் பசுமையாக தென்படும் கம்பம் பள்ளத்தாக்கில் எங்கு நோக்கினும் சாலைகள் என்ற நிலை உருவாக உள்ளது.

Tags : Uthamapalayam ,area ,landmarks , uthamapalayam,four ways road, highways Department, theni
× RELATED வாட்டி வதைக்கும்...