×

குப்பைமேட்டில் கிடந்த மரகதலிங்கம் மீட்பு வேட்டவலம் ஜமீனில் ஐஜி விசாரணை

வேட்டவலம்: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலையின் மீது  மனோன்மணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திருட்டு போனது. கோயிலின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்தாண்டு இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
 
இந்நிலையில், ஜமீன் ஊழியர் பச்சையப்பன் என்பவர், நேற்று முன்தினம் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைமேட்டில், திருட்டுப் போன மரகதலிங்கம் இருப்பதை பார்த்து, ஜமீன் அரண்மனைக்கு எடுத்து சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பாதுகாப்பாக வைத்தார். பின்னர், வேட்டவலம் போலீசாருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் மரகதலிங்கத்தை நேற்று முன்தினம் மீட்டு காவல் நிலையத்தில் வைத்தனர்.

இதற்கிடையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று காலை வேட்டவலம் ஜமீன் வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள மனோன்மணி அம்மன் கோயிலையும், கோயிலில் மர்ம ஆசாமிகளால் துளையிடப்பட்ட சுவரையும், மரகதலிங்கம் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, லிங்கம் கண்டெடுக்கப்பட்ட குப்பைமேடு ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தார். மேலும், ஜமீன் மகேந்திர பந்தாரியார் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.


Tags : IG ,trial , garbage, wooden lake, recovery, hunt, jamine, IG trial
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...