×

கோட்சே தேசபக்தர்: பிரக்யாசிங் பேட்டி

தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று, பாஜ தலைவர் பிரக்யாசிங் தாகூர் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி நான்காவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இம்மாநில தலைவர் போபாலில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, பாஜ சார்பில் பெண் சாமியாரும், பாஜ தலைவர்களில் ஒருவருமான பிரக்யாசிங் தாகூர் போட்டியிடுகிறார். சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரக்யா சிங், சமீபத்தில் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கர்கரே தன்னை விசாரணையின்போது கொடுமைப்படுத்தியதால், தான் விட்ட சாபத்தினால் அவர் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியானார் என்று கூறினார். இது பெரும்பரப்பை ஏற்படுத்தியது.


இதை பாஜ தலைமை அவரை கண்டித்தது. இதனால் சில நாட்கள் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் வாயை திறந்துள்ளார். இம்முறை அவர் பேசியதை பாஜ தலைமைக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  போபாலில் அவர் அளித்த பேட்டியில், ‘‘நாதுராம் கோட்சே தேசபக்தர். அவர் எப்போதும் தேசபக்தர்தான். தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறுபவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்’’ என்றார். கோட்சே சர்ச்சையை தொடங்கி வைத்தவர், நடிகர் கமல். ‘‘கோட்சே முதல் இந்து தீவிரவாதி’’ என்று அவர் கூறியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இப்போது பிரக்யா சிங், அதை தேசப்பக்தர் என்று கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கிடையே, பாஜ தலைமை கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, தன்னுடைய கருத்தை வாபஸ் பெறுவதாகவும், தன்னுடைய பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பிரக்யாசிங் தெரிவித்தார்.


Tags : Godse Patriot , Godse Patriot, Prakashingh, Interview
× RELATED உளவுத்துறையின் ரிப்போர்ட்டால்...