×

சூலூர் இடைத்தேர்தலுக்கு துணை ராணுவ படை வருகை

கோவை: கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் நேற்று கோவை வந்தனர். சூலூர் இடைத்தேர்தலுக்காக தொகுதியில் 120 மையங்களில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதில் 160 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவுள்ளது. இதர பகுதிகளில் வீடியோ கேமரா மூலமாக ஓட்டுபதிவு கண்காணிக்கப்படும். ஓட்டுபதிவு நாளில் சூலூர் தொகுதியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

 மேலும் துணை ராணுவ படை பிரிவில் பணியாற்றும் 250 பேர் நேற்று தேர்தல் பணிக்காக கோவை வந்தனர். ஓட்டு பதிவிற்கு முந்தைய நாள், ஓட்டு பதிவு நாள் என இரு நாள் இவர்கள் பணியாற்றுவார்கள். ஓட்டு சாவடிகளில் ஓட்டு மெஷின், கட்டுப்பாட்டு கருவிகள் வரும் 18ம் தேதி அனுப்பி வைக்கப்படும். அன்றைய தினத்தில் போலீசார் வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஓட்டு மெஷின்கள் ஓட்டு எண்ணிக்கை மையம் கொண்டு செல்லும் வரை பலத்த கண்காணிப்பு இருக்கும். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை தேர்தல் பிரிவின் அனுமதி பெறாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : bypoll ,Sulur , Sulur, paramilitary force, visit
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி