×

பெரியாறு நீர்த்தேக்கத்தில் கார் பார்க்கிங் கேரளா மீது காலதாமதமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

கூடலூர்: பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் விதிகளை மீறி கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசு தாமதமாக கேரள அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தி உள்ளனர். பெரியாறு நீர்தேக்கப்பகுதியான ஆனவச்சாலில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கேரள அரசு கார் பார்க்கிங் கட்டி வருகிறது. பார்க்கிங் கட்டும் இடம் பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியென தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகாததாலும், முறையான ஆவணங்களை ஒப்படைக்காததாலும், வாகன நிறுத்தத்திற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை 2017, பிப். 20ல் பசுமை தீர்ப்பாயம் நிராகரித்தது. மேலும், ஆனவச்சால் பகுதியில் கட்டிடங்கள் இல்லாத வாகன நிறுத்தும் இடம் மட்டும் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.

இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கேரள அரசு தொடர்ந்து அணைப்பகுதியில் நிரந்தர கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். கேரள அரசு மீது தகுந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மண்டல செயலாளர் திருப்பதிவாசகன் கூறியதாவது: பெரியாறு அணை வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாமலும், ஆவணங்களை ஒப்படைக்காமலும் இருந்ததால்தான், பசுமை தீர்ப்பாயம் கேரளாவுக்கு கட்டிடங்கள் இல்லாத வாகன நிறுத்தம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியது. தமிழக அதிகாரிகள் இப்போது திடீரென சுதாரித்துக்கொண்டு, தாமதமாக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இது காலம் கடந்த ஞானோதயம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Periyar ,Kerala ,government ,Tamil Nadu , Periyar reservoir, car parking, Kerala, Tamil Nadu government,
× RELATED முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டும்...