×

திமுக ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: சூலூர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சூலூர்: தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறிக்கான உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படும்’’ என்று சூலூர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை இரண்டாம் கட்டமாக பிரசாரம் செய்தார்.

சூலூர் தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி அம்பேத்கர் நகரில் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் அவருடன் கைகொடுத்து, செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டார். பின்னர், நீலம்பூர் அரசு காலனியில் மு.க.ஸ்டாலின், திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது  அவர்  பேசியதாவது:
ஜெயலலிதா மரணத்திற்கு பின் அக்கட்சி சின்னாபின்னமாக உடைந்துள்ளது. அதி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகள், தங்களது பதவியை காத்துக்கொள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மாதந்தோறும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர். அதற்கான பணத்தை கொள்ளையடிக்கத்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் ஊழல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி மெஜாரிட்டி இல்லாத ஆட்சியாக உள்ளது. மோடிதான் இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கிறார். இத்தேர்தல் மூலம், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

தமிழகத்தில் ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்துவிட்டது. அதில், தி.மு.க.தான் வெற்றி பெறபோகிறது. இப்போது, நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தி.மு.க.தான் வெற்றிபெறும். எனேவ பெரும்பான்மை பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும். கலைஞர் ஆட்சியில்தான் அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

தற்போதைய அதிமுக ஆட்சியில் எந்த நற்செயல்களும் நடக்கவில்லை. இத்தொகுதியில், அருந்ததியர் இன மக்கள் வாழும் பகுதிகளில் பேருந்து வசதி, சாலை வசதி, மருத்துவமனை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி, பட்டா பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.  இந்த பிரச்னைகளை களைய தற்போதைய ஆளும் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தீர்வு காணப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

சூலூர் முதலிபாளையம் பகுதியில் மு.க.ஸ்டாலின், கைத்தறி நெசவாளர்களுடன் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தினார். அப்போது, கைத்தறி நெசவாளர்கள், மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் கைத்தறி நெசவாளர்களுடன், தி.மு.க. தொப்புள் கொடி உறவு கொண்டது. கலைஞர் ஆட்சியில்தான் கைத்தறி நெசவுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஹட்கோ கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

முதியோர் ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய அதிமுக ஆட்சி மக்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அரசின் அடிமையாக எடப்பாடி உள்ளார். ஜி.எஸ்.டி வரியால் கைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 முறை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று வந்தார்.

ஆனால், அதில் இருக்கும் பிரச்னைகளை எடுத்துச்சொல்லவில்லை. ஆட்சியை காப்பாற்ற அங்கு சென்று அடிபணிந்துவிட்டு வந்துள்ளார். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அப்போது, ஜி.எஸ்.டி பிரச்னைக்கு நல்ல தீர்வு காணப்படும். கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறிக்கான உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படும். கைத்தறி தொழில் நவீனமயமாக்கப்படும்.

கைத்தறி ரகங்களுக்கு கூலி வரையறை ஏற்படுத்தப்படும். நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைத்து கொடுக்கப்படும். கைத்தறியாளர்களுக்கென பிரத்யேகமாக காட்சியகம் அமைத்து கொடுக்கப்படும். இந்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும். அதனை மனதில் வைத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதைத்தொடர்ந்து, அப்பநாயக்கன்பட்டி பஸ் நிலையம், செலக்கரிசல், பெரியார்நகர், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு பேசினார். மாலையில், மு.க.ஸ்டாலின், முத்துக்கவுண்டன்புதூர், கரவழி மாதப்பூர் மற்றும் இருகூர் பகுதிகளில் வேன் பிரசாரம் செய்தார்.

Tags : DMK ,campaign ,MK Stalin , DMK rule, handloom weavers, demands, executed, MK Stalin, confirmed
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...